சூ. 437 :ஒன்றுமுதல் ஒன்பான் இறுதி முன்னர் 

நின்ற பத்தன் ஒற்றுக்கெட ஆய்தம் 

வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப 

கூறிய இயற்கை குற்றிய லுகரம் 

ஆறன் இறுதி அல்வழி யான  

(32)
 

க-து:

ஒன்று முதல் ஒன்பானீறாகிய எண்ணுப்பெயரொடு பத்து என்னும்
சொல் வந்து புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்: ஆறு என்னும்  சொல்லிறுதி   அல்லாத,   ஒன்று  முதல்
ஒன்பான் ஈறாக நிற்கும் எண்ணுப் பெயரிறுதி   முன்னர்   வருமொழியாக
வந்து புணர்ந்த பத்து  என்னும் சொல்லுள்  நின்ற தகர   ஒற்றுக்   கெட
ஆய்தம் வந்து அவ்விடத்து நிலைபெறும்  இயல்பிற்று;   என்று   கூறுவர்
புலவர். நிலை  மொழியீற்றுக்   குற்றியலுகரம்   மேற்கூறிய  இயற்கையாய்
மெய்யொடுங் கெட்டுப் புணரும்.
 

எ-டு:  மேல்வரும் சிறப்புச் சூத்திர உரையுட் காட்டப் பெறும்.
 

‘‘வந்து இடைநிலையும்’’ என்றதனான்   ஆய்தம்   வாராமல்  ஒருபது,
இருபது எனவும் நிற்குமென்க.