சூ. 445 :

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்

முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் 

பஃதென் கிளவி ஆய்த பகரங்கெட 

நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி 

ஒற்றிய தகரம் றகர மாகும்

(40)
 

க-து:

ஒன்பஃது  என்னும்  சொல்  பத்து என்பதனொடு புணருமிடத்து
இருசொல்லும்    திரிபுறுதலின்   அவை  இரண்டும்  திரியுமாறு
இலக்கணநெறியாற்  கூறுகின்றது.  இஃது  ஆய்தமின்றி  ஒன்பது
எனவும் வரும்.
 

ஒன்பான் என்பது ஒன்பஃது என்னும் சொல்லின் திரிபுப் பெயர்.  பஃது
என்பதும் பத்து என்பதன் திரிபாகும்.
 

பொருள்:  ஒன்பஃது    என்னும்   சொல்   பஃது    என்பதனொடு
புணருங்காலை,    நிலைமொழியாகிய   ஒன்பஃது   என்னும்   சொல்லின்
ஒகரத்தின்மேல்   ஒரு  தகர மெய் ஒற்றி நிற்கும், அதன் முன்னின்ற னகர
ஒற்று ணகரமாய்  இரட்டி  நிற்கும்.  பஃது  என்னும்  இறுதிச்  சொல்லும்,
வருமொழியாகிய  பஃதென்பதன்கண்  ஆய்தமும் பகர உயிர்மெய்யும் கெட
ஓர்  ஊகாரம்  வந்து  நிற்றல்  வேண்டும்.  இறுதி  நின்ற தகர உகரத்துள்
தகரமெய் றகரமாகத் திரியும்.
 

எ-டு:  ஒன்பஃது + பஃது டி  தொண்ணூறு  எனவரும்.  திரிந்தமுறை:-
ஒன்பஃது  டி  தொன்பஃது டி தொண்ண்பஃது டி தொண்ண் டி தொண்ணூ:
பஃது டி து து டி று. டி தொண்ணூறு என்றாயின.