அஃதாவது; ஆறு என்னும் பெயர்தவிர்ந்த ஏனைய எண்ணுப்பெயர்களின் குற்றியலுகர ஈறு மெய்யொடுகெட்டும், முதலீரெண்ணின் ஒற்றுக்கள் திரிந்தும், இரண்டென்னும் எண்ணின் ரகர உயிர்மெய் கெட்டும், மூன்றும் ஆறும் முதல் குறுகியும், மூன்றன் ஒற்றுப் பகரமாகவும், நான்கன் ஒற்று றகர மாகவும் ஐந்தன் ஒற்று மகரமாகவும் எட்டன் ஒற்று ணகரமாகவும் திரிந்தும் நிற்கும் என்றவாறாம். |
ஒன்று, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு ஆகியவை இம்மாட்டேறு பெற்றும் மூன்றும் ஐந்தும் இதனொடு பின்னர்க் கூறப்படும் சிறப்பு விதிபெற்றும் புணரும் ஒன்பது வேறு சிறப்பு விதி பெறும். |
எ-டு: ஒருகலம், இருகலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும் ஒருகழஞ்சு, இருகழஞ்சு, ஒன்பது கழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் நாற்கலம் - எண்கலம் சாடி, தூதை, பானை எனவும் நாற்கழஞ்சு - எண்கழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் அறுகலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை வட்டி எனவும் அறுகழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் வரும். ‘தோன்றுங்காலை’ என்றதனான் நான்கன் ஒற்று மென்கணத்துத் திரியாது நிற்றல் கொள்க. நானாழி, நான்மண்டை எனவரும். |