சூ. 447 :மூன்ற னொற்றே வந்த தொக்கும்(42)
 

க-து :

மூன்று என்னும் எண்ணுப்பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி
கூறுகின்றது.
 

பொருள்:  மூன்றென்னும்  பெயர்  கசதப   வருமிடத்து   மேற்கூறிய
திரிபொடு னகர ஒற்று வருமொழிமுதல் நின்ற மெய்யினை ஒத்துத்  திரிந்து
நிற்கும்.
 

எ-டு:  முக்கலம், முச்சாடி, முத்தூதை, முப்பானை எனவும் முக்கழஞ்சு,
கஃசு, தொடி, பலம் எனவும் வரும். ஏனைக்கணங்கள்  பற்றி மேல் விதந்து
கூறுவார்.