சூ. 45 :

ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி

இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி உளப்பட

மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

(12)
 

க-து:

எழுத்தானாம் மொழிவகை இத்துணை என வகையும் அவற்றின்
பெயரும் கூறுகின்றது.
 

பொருள்:  எழுத்தானாம் மொழிகளின்  வகை   தோன்றிய முறைமை;
ஓரெழுத்தானாகியதொரு  வகையும்,   ஈரெழுத்தானாகியதொரு   வகையும்,
இரண்டினும்      மிக்க        எழுத்தானாகியதொரு     வகையுமுட்பட
மூன்றுவகைகளேயாம்.
 

ஈரெழுத்து    மொழியும்    தொடர்ந்ததே   எனினும்   புணருமிடத்து
இரண்டிறந்திசைக்கும்   தொடர்மொழியும்,    இதுவும்   செய்கை    பற்றி
வேறுபடுதலின் தொடரியல் நோக்கி இங்ஙனம்  வகுத்தோதப்  பட்டதென்க.
இதற்குப்  பிறர்கூறும்  காரணங்கள்  இலக்கண  முறை  நோக்கியவையல்ல
என்றறிக.
 

எ-டு:  ஓரெழுத்தொருமொழி  மேற்காட்டப்பட்டது.   அணி,  ஆடு,
உலா,  கலை, ஆல், ஆண்,  கனி, மணி,  நெல், புல்  இவை  முதலாயின
ஈரெழுத்தொரு மொழிகள். கடல், பறவை, கன்னல், ஆகாயம்,  கார்த்திகை,
உத்திராடம் இவை முதலாயவை  இரண்டிறந்திசைக்குந்   தொடர்மொழிகள்.
சேரமான், மலையமான் என்றாற்போல்வன  ஒருமொழிப்புணர்ச்சியான் வந்த
பெயர்ச்சொற்களாகும்.  தொல்காப்பியன், இளம்பூரணன், நச்சினார்க்கினியன்
என்றாற்போல்வன  ஒருசொல்  நீர்மைத்தாய்  நிற்கும்  தொகைமொழியாய
பெயர்ச்சொற்கள்.
 

இலக்கணநோக்கில் மொழியென்பதன் அமைப்பு வேறு; சொல் என்பதன்
அமைப்பு வேறு. மொழி என்பது பொருளையும் பொருளின்  தன்மையையும்
சுட்டிநிற்கும். சொல் என்பது பெயர் வினை இடை உரி  என உணரநிற்பது.
ஒற்றெழுத்துக்களும்  சார்பெழுத்துக்களும் செய்யுட்கண்  அலகுடையனவாக
எண்ணப்பெறா, மொழிக்கண்  எண்ணப்பெறும் என்க. இதனைத் ‘‘தொடரல்
இறுதி’’  எனவும்   ‘‘நெடிற்றொடர்   குற்றியலுகரம்’’  எனவும்  ஆசிரியர்
கூறுமாற்றான் அறிக.