ஒன்பது என்னும் பெயர் அளவுப் பெயர் நிறைப் பெயரொடு புணருமாறு கூறுகின்றது.
பொருள்:ஒன்பான் என வழங்கப்படும் ஒன்பது என்னும் எண்ணுப் பெயரிறுதி அளவுப் பெயரும் நிறைப் பெயரும் வருமிடத்துத் தன் உருவு நிலை திரியாமல் சாரியை மொழியாகிய இன் என்பதைப் பெற்றுப்புணரும்.
எ-டு:ஒன்பதின் கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; ஒன்பதின் கழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் வரும்.
‘ஒன்பான்’ என ஆசிரியர் உடம்பொடு புணர்த்துக் கூறியதனான் ஒன்பது என்னும் சொல் அது என்னும் ஈறுகெட்டு ஆன்சாரியை பெற்று வருதல் செய்யுள் வழக்கெனக் கொள்க.
இனிச், ‘‘சாரியை மொழியே’’ என்றதனான் உயிர்முதலாகிய அளவுப் பெயர் வருமிடத்து ஒன்பதிற்றகல், ஒன்பதிற்றுழக்கு என இன் இற்றாகத் திரிதலும் கொள்க. ஒன்பதிற்றுக்கலம் என வல்லெழுத்து வருங்கால் இன்இற்றாதல் ஒப்புமையாக்கத்தான் வந்த வழக்காதலின் அதனைப் புறனடையாற் கொள்க.