சூ. 463 : | ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே |
| முந்தை ஒற்றே ளகார மிரட்டும் |
| நூறென் கிளவி நகார மெய்கெட |
| ஊஆ வாகும் இயற்கைத் தென்ப |
| ஆயிடை வருதல் யிகர ரகரம் |
| ஈறுமெய் கெடுத்து மகார மாகும் |
(58) |
க-து: | ஒன்பது என்னும் எண்ணுப்பெயர் நூறென்பதனொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: ஒன்பான் என வழங்கும் ஒன்பது என்னும் எண்ணுப் பெயர் நூறென்பதனொடு புணருங்காலை நிலைமொழியாகிய ஒன்பது என்னும் முதனிலை, பத்து என்பதனொடு புணரும்வழிக் கூறிய அத்தன்மைத்தேயாம். (அஃதாவது ஒகரத்தின் மிசை ஒரு தகரமெய் ஒற்றித் தொ என நிற்கும். பஃது என்னும் சொல்கெடும் என்றதாம்) அதன் முன்னின்ற னகர ஒற்று ளகரமாய் இரட்டும், வருமொழியாகிய நூறென்னும் சொல் நகரமெய்கெட அதனை ஊர்ந்து நின்ற ஊகாரம் ஆகாரமாகத் திரியும். அவ்விடத்து யிகர உயிர் மெய்யும் ரகர உயிர்மெய்யும் வருதலைச் செய்யும், இறுதிக் குற்றுகரத்தையும் அஃதூர்ந்து நின்ற மெய்யையும் கெடுத்து ஒரு மகர ஒற்றுத் தோன்றி நிற்கும். இத்திரிபு இலக்கணத்தது எனக்கூறுவர் புலவர். |
இத்திரிபு சொற்பிறப்படிப்படையிற் கூறப்பட்டதன்று வழங்கற்பாடு பற்றிய இலக்கண நெறி என்பார், ‘‘இயற்கைத் தென்ப’’ என்றார். பிறவிளக்கங்கள் முன்னர்க்கூறப்பெற்றன. யிகர ரகரம் என்றது அவ்வவ் உயிர்மெய்களை என அறிக. |