சூ. 469 :

ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம்

ஈறுமெய் ஒழியக் கெடுதல் வேண்டும்

(64)
 

க-து:

ஆறு என்னும் எண்  முதல்  குறுகாமல்  நின்று  ஆயிரத்தொடு
புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  ஆறு  என்னும்   சொல்லிடத்ததாகிய  குற்றியலுகர   ஈறு
ஆயிரம் என்பதனொடு   புணருமிடத்துத்தான்   ஊர்ந்து   நின்ற   மெய்
கெடுதலினின்று ஒழியத் தான்மட்டும் கெடும்.
 

முன்னர்  மாட்டேற்றான்   (சூ. 35)    குறுகிநின்ற   அறு    என்பது
ஆயிரத்தொடு  புணருங்காலை   நீண்டு  நிற்குமென்பார்.  ஆறன்  உகரம்
என்னாது    ‘‘குற்றியலுகரம்’’   என்றார்.   முதல்   நீண்டாலன்றி   அது
குற்றியலுகரமெனற் கேலாமையறிக.
 

எ-டு:  ஆறு + ஆயிரம் =ஆறாயிரம் எனவரும்.
 

இனி,  உரையாசிரியன்மார்  யாவரும்  அறு  எனமுதல்  குறுகி  நின்ற
சொல்லுக்கே   இவ்விதி   கூறினார்  என்றும்,  குற்றுகரமாயின்  உயிரேறி
முடியுமாகலின் கேடு கூறல்  வேண்டா  என்றும்  கூறி  ‘அறாயிரம்’  என
இருவகை வழக்கினும் இல்லாததொன்றை எடுத்துக்காட்டியுள்ளனர்.
 

குற்றியலுகரம்   உயிரேற   இடந்தந்து   கெடாது   நிற்கும்  என்பதே
ஆசிரியர்   கருத்தெனினும்,   ஈண்டு   ‘‘ஈறுமெய்   யொழியக்   கெடும்’’
என்றதற்குக்  காரணம்   எண்ணுப்   பெயர்ப்   புணர்ச்சிக்கண்  “குற்றிய
லுகரம் மெய்யொடும் கெடும்’’ (குற்-28) என்னும் விதியை விலக்குதற்கென்க.
என்னை?
 

ஆசிரியர் இவ்வியலுள் குற்றியலுகர எண்ணுப்  பெயர்ப்  புணர்ச்சிக்குப்
பொதுவாகச்   சில   விதிகளைக்கூறிப்   பின்வருவனவற்றை  அவற்றொடு
மாட்டெறிந்து  பின்னர்  வேண்டும்  சிறப்பு  விதிகளைக்  கூறிவருகின்றார்.
அம்முறைமையான்    ஒன்றுமுதல்    ஒன்பானீறாய   எண்ணுப்பெயர்கள்
அளவைப் பெயர்களொடு  புணர்தற்கு  விதியாக  முதற்கண்  “ஒன்றுமுதல்
ஒன்பான் இறுதி முன்னர்” (குற்-32)  என்னும்   சூத்திரத்தான்  பொதுவிதி
கூறுங்காலை அதனை ‘‘ஒன்றுமுத லாக எட்ட  னிறுதி’’ (குற்-28)  என்னும்
சூத்திரத்தில்    உள்ளவிதியொடு    மாட்டேற்றிக்    கூறுமிடத்து   ஆறு
என்னும்  சொல்லைத்   தவிரப்   பிற   எல்லாம்  ஈற்றுக்  குற்றியலுகரம்
மெய்யொடும் கெடும்  (குற்-32)  எனப்பெறப்படவைத்தார்.  ஆண்டு  ஆறு
என்பதனை நீக்கிய  காரணம்  அது  பத்து  என்பதனொடு  புணருமிடத்து
முதல் குறுகி  முற்றுகர  ஈறாய்  (குற்-35)  நின்று  புணர்தலினாலேயாகும்.
பின்னர்  உயிர்  முதலாய  அளவுப்  பெயர்களொடு  புணர்தற்கண்  அறு
என்பது முதல் நீடும் (குற்-53)  என்றார்.  அவ்வழி  அது  குற்றியலுகரமாக
மாறி ஆறகல், ஆறுழக்கு எனப்  புணர்ந்தது. பின்னர் நூறு  என்பதனொடு
புணருமிடத்துப்   பத்து   என்பதனொடு   புணரும்   விதியை   (குற்-55)
மாட்டேற்றிக் கூறலின் மீண்டும் ஆறு என்பது  அறு  என  முற்றுகரமாகத்
திரிபுறுகின்றது.
 

பின்னர்   ஒன்று   முதலாகிய   எண்ணுப்  பெயர்கள்  ஆயிரத்தொடு
புணருமிடத்து ‘‘ஒன்றுமுதல் ஒன்பான் இறுதி முன்னர்’’ (குற்-32) ‘‘ஒன்றுமுத
லாக   எட்ட   னிறுதி’’   (குற்-28)   என்னும்   விதிகள்  தொடர்தலான்
அவ்விதிகளின்படி   ஆறு   என்பது   அறு   எனக்குறுகி  முற்றுகரமாய்
மெய்யொடுங் கெடாது நிற்கும். இச்சூத்திர (குற்-64) விதிப்படி  முதல்நீண்டு
குற்றியலுகரமாகி நிற்றலின் (குற்-32, 28) ஆகிய  சூத்திரங்களின்  விதிப்படி
குற்றியலுகர ஈறு  மெய்யொடுங்  கெடுதல்  வேண்டும்.  அஃதாவது  ஆறு
என்பது ஆயிரத்தொடு புணருங்கால்  குறுகுதலில்லை  என்பதை  ‘‘ஆறன்
மருங்கிற்   குற்றிய   லுகரம்’’   எனப்பெறப்பட   வைத்தமையான்  அது
குற்றியலுகரமாக நின்றது,  அவ்வழி  ஒன்றுமுதலாக  எட்டனிறுதி  என்னும்
விதிப்படி  (குற்-28)   மெய்யொடும்  கெடும்.  அங்ஙனம்   மாட்டேற்றான்
மெய்யொடும் கெடும் என நின்ற விதியை விலக்குதற் பொருட்டு ஈறு, மெய்
ஒழியக் கெடுதல் வேண்டும் என்றார் என்க.