சூ. 47 :

தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்

மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை 

(14)
 

க-து:

நூன்மரபின்கண்  உயிர்மெய்க்கண்  நிற்கும்  மெய்யொலிகளின்
மயக்கங்   கூறிய    முகத்தான்   இன்னபுள்ளி     முன்னர்
இன்னமெய்வருதற்கியலும்  என  மொழி  நிலையும்  உணர்ந்து
கொள்ள வைத்தமையான் அம்மெய்கள்  அகரமொடு  சிவணித்
தம்மை      உணர்த்த  வருங்கால்  அம்மரபிற்றிரிந்துவரினும்
இழுக்காகாதென மெய்கள்   உடன்நிற்கும்  நிலைபற்றியதொரு
புறனடை கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறிய மெய்களின்   தன்மை   பற்றிய   இலக்கணங்
கூறுமிடத்துப் பதினெட்டு எழுத்துக்களும்  நூன்மரபிற்  கூறியாங்கு நிற்கும்
நிலையின் மாறுபடுதல் குற்றமில்லை.
 

எ-டு: 

‘‘அவற்றுள், லளகான் முன்னர் யவவுந் தோன்றும்’’

‘‘வல்லெழுத் தியையின் டகார மாகும்’’ எனவரும்.
 

இவற்றுள்  ளகரப்புள்ளியொடு  இணைந்து   நிற்றற்கேலாத   லகரமும்,
னகரப்புள்ளியொடு நிற்றற்கேலாத  டகரமும்  தம்மை  உணர்த்த  வந்தவழி
இணைந்து நிற்குமாறு கண்டுகொள்க.
 

மானம் என்பது  மன்  என்னும்  இடைச்சொல்லடியாகப்  பிறந்தசொல்.
(மன்"மான்  +  அம்  =  மானம். மன்  =  கழிதல்"  போக்குதல்)  இதனை
ஆனம்   எனப்பிரித்து    அஃது    ஹானம்    என்னும்   வடமொழித்
திரிபெனமயங்குவாரும் உளர்.
 

இச்சூத்திரம்   மெய்யெழுத்துக்கள்      மயங்கி     (கூடி)    நிற்கும்
நிலைபற்றியதெனினும் ‘‘அவற்றுள் லளகான் முன்னர்’’ எனவும்  ‘‘இயையின்
டகாரமாகும்’’  எனவும்  தனிமெய்களின்  இயல்பைத்  தொடர்மொழிகளாற்
கூறுமிடத்து எடுத்துக்கொண்ட  மெய்கள்  எழுவாய்  முதலியவாக  ஆகிக்
குறித்துவருகிளவியாகப்  புணர்தலின்  அவை  மொழிநிலைமை   எய்துதல்
நோக்கி ஈண்டு வைக்கப்பட்டதென்க.