சூ. 471 :

நூறா யிரமுன் வரூஉங் காலை

நூறென் இயற்கை முதனிலைக் கிளவி

(66)
 

க-து:

ஒன்று என்பது நூறாயிரம் என்பதனொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  முதல் நிற்கும் எண்ணாகிய ஒன்று என்னும் சொல்லின்முன்
நூறாயிரம் என்பது  வருமிடத்து  நூறு  என்பதனொடு  புணர்தற்கு  ஓதிய
இயல்பிற்றாம்.
 

அஃதாவது ஈறுகெட்டு  னகரம்  ரகரமாய்  உகரம்  பெற்றுப்  புணரும்
என்றவாறு.
 

எ-டு:  நூறாயிரம் எனவரும்.
 

முதனிலைக்   கிளவியை    மாட்டெறிந்து    கூறி    ஏனையவற்றைக்
கூறாமையான் அவை இரண்டு  நூறாயிரம்,  மூன்று  நூறாயிரம்.........ஒன்பது
நூறாயிரம் எனத் திரியாது வருமென்பது ஆசிரியர் கருத்தாகும்.
 

இதனை ஒன்றுமுதல்  ஒன்பான் எண்ணுப்  பெயர்கட்குப் பொதுவாகவும்
ஒன்று என்பதற்குச் சிறப்பாகவும் கூறியதாகக் கொள்வர் உரையாசிரியன்மார்.
அங்ஙனமாயின்   ஒன்பது    நூறாயிரம்   என்பது  தொள்ளாயிரமாயிரம்
எனவருதல் வேண்டும். அதனை ஏற்புழிக் கோடல் என்பதனான் விலக்குவர்
அவர்.
 

ஆசிரியர் கருத்து ஏனைய  எண்கள்  திரியாதென்பதேயாம்.  என்னை?
இருநூறாயிரம், முந்நூறாயிரம் எனவரின்  நிலைமொழி  இருநூறு,  முந்நூறு
என்றும்  வருமொழி  ஆயிரம்  என்றும்  பொருள்  படும்.  ஒருநூறாயிரம்
என்பதன்கண்  அவ்ஐயம்   நிகழாது.  ஒன்று  நூறாயிரம்  என   நிற்பின்
ஒன்றுபட்ட   அல்லது  பொருந்திய   நூறாயிரம்  எனப்  பொருள்  திரிபு
நேரிடும் என்க.