சூ. 472 : | நூறென் கிளவி ஒன்றுமுத லொன்பாற்கு |
| ஈறுசினை ஒழியா இனஒற்று மிகுமே |
(67) |
க-து: | அஃது ஒன்று முதல் ஒன்பான் எண்ணொடும் புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: நூறு என்னும் எண்ணுப் பெயர் ஒன்றுமுதல் ஒன்பதுவரையுள்ள எண்ணுப் பெயர் வருமிடத்து ஈறாகிய குற்றியலுகரமும் அஃதூர்ந்து நின்ற றகரமும் நீங்கா; ஆண்டு அச்சினை எழுத்தாகிய றகர ஒற்றுமிகும். |
ஈறுசினை என்றது உம்மைத்தொகை - ஈறும் சினையும் என விரி்த்து ஒழியா என்பதற்கு வினைமுதலாக்குக. |
எ-டு: நூற்றொன்று, நூற்றிரண்டு, நூற்றுமூன்று, நூற்றுநான்கு. நூற்றைந்து, நூற்றாறு, நூற்றேழு, நூற்றெட்டு, நூற்றொன்பது எனவரும். இருநூற்றொன்று, முந்நூற்றொன்று என அடையடுத்துவரினும் இதுவே விதியெனக் கொள்க. |
‘‘ஈறுசினை ஒழியா’’ என்பதே பாடம் என்பது ‘‘ஈறாகிய குற்றியலுகரமும் அவ்உகரம் ஏறிய மெய்யாகிய சினையும் கெடாது நிற்ப’’ என்னும் இளம்பூரணர் உரையான் தெளியப்பட்டது. என்னை? இந்நூலுள் ஒழித்து, ஒழிய எனவரும் (சூ. 177, 234, 316, 348, 351) சொற்களுக்கு வேறுசொற்களான் விளக்கங் கூறாமல் அவற்றையே உரையாக இளம்பூரணர் எழுதியுள்ளமையானும் இச்சூத்திரத்துள் மட்டும் ‘கெடாது நிற்ப’ என எழுதியுள்ளமையானும் தெளியப்பட்டது. இதற்குமாறாக 469 ஆம் நூற்பாவில் மட்டும் ‘‘கெடாது நிற்ப’’ என உரைகாணப்படுகிறது. அது நச்சினார்க்கினியர் உரைப்பயிற்சியால் மாணாக்கரான் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். |
அன்றி ‘‘ஒழிய’’ என்பதே பாடமாகக் கருதின் அவர் உரை பொருந்தாததாகும். என்னை? சூத்திர அமைதியை நோக்கின் ‘ஈறுசினை ஒழிய இனஒற்று மிகுமே’ என்பதற்கு, ஈறுசினை மிகாது இன ஒற்றுமிகும் என்பது பொருளாதலன்றி ஈறுகெடாது நிற்ப எனப் பொருள் கோடற்கியையாதென்க. காரணம் பிற சூத்திரங்களுள் ஒழிய என்னும் சொல் கெடும் என்பதையே நோக்கி நிற்கின்றது. ஈண்டு மிகும் என்பதை நோக்கி நிற்கின்றதாகலின் என்க. |
இச்சூத்திரத்து நேர்ந்த சிறுபிழையை ஓராது உரையாளரும், சிவஞான முனிவரும் வேங்கடராசுலுரெட்டியாரும் தம்முள் முரணிக்கூறும் விளக்கங்கள் யாவும் ஒவ்வாமையை எனது குற்றியலுகர ஆய்வுக் கட்டுரையுள் கண்டு கொள்க. |