நூறு என்னும் சொல் ஒருபஃது முதலியவற்றொடு புணருமாறு கூறுகின்றது.
பொருள்:ஒருபஃது, இருபஃது என ஒன்று முதலாயவற்றைத் தொடர்ந்த தொகைச் சொற்கள் நூறு என்பதன் முன்வந்து புணருமிடத்தும் மேற்கூறிய செய்கைத்தாய் முடியும். அஃதாவது ஈறுசினை ஒழியா இனஒற்றுமிகும் என்றவாறு.
எ-டு:நூற்றொருபஃது, நூற்றிருபஃது, நூற்றுமுப்பஃது எனவரும். தொண்ணூறு என்பது பஃதூர்ந்த திரிபேயாகலின் அதுவும் அடங்க இம்மாட்டேறு நின்றது. அது நூற்றுத் தொண்ணூறு எனவரும். இம்மாட்டேறு இருநூற்றொருபஃது, முந்நூற்றொருபஃது என அடையடுத்து நிற்பினும் பொருந்தும்.