நூறென்பது பிற அளவுப் பெயர்களொடு புணருமாறு கூறுகின்றது.
பொருள்:அளவுப் பெயரும் நிறைப் பெயரும் வருமிடத்து நூறென்பதன் ஈறும் சினையும் மேற்கூறிய இலக்கணத்தினின்று வேறுபடா. அவ்வழி நிலைமொழிக் குற்றியலுகரமும் வருமொழி வல்லெழுத்திலக்கணமும் மேலே கூறிய தன்மையினவாம் என்று கூறுவர் புலவர்.
அஃதாவது நூறென்பது ஈறும் சினையும் ஒழியாவாய் இன ஒற்றுமிக்கு வன்றொடர்க் குற்றியலுகரமாக நிற்கும். அவ்வழி வருமொழி வல்லெழுத்துமிகும் என்றவாறு. வல்லெழுத்திற்கு இவ்வாறு விதந்தமையான் ஏனைக்கணத்துள் உயிர்க்கணம் ஏறி முடியும், மென்கணமும் இடைக்கணமும் இயல்பாகும் என்க.
எ-டு:நூற்றுக்கலம், சாடி, தூதை, பானை எனவும்; நூற்றுநாழி, மண்டை, வட்டி, எனவும்; நூற்றகல், நூற்றுழக்கு எனவும்; நூற்றுக்கழஞ்சு, தொடி, பலம், கஃசு எனவும் வரும். மாட்டேற்றான் ஒருநூற்றுக்கலம், இருநூற்றுக்கலம் என அடையடுத்துவருதலும் கொள்க.
குற்றியலுகரமும் என்ற மிகையானே அளவுப்பெயரல்லாத பிற பெயர்களும் நூற்றுக்கால் மண்டபம், நூற்றிதழ்த்தாமரை என வரும். இன்னும் இதனானே சிறுபான்மை நூறுகலம், நூறுகழஞ்சு என இயல்பாக வருதலும் கொள்க.