சூ. 475 :

ஒன்று முதலாகிய பத்தூர் கிளவி

ஒன்றுமுதல் ஒன்பாற்கு ஒற்றிடை மிகுமே

நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும்

(70)
 

க-து:

அடையடுத்துவரும்   பஃதென்பது   ஒன்று   முதல்  ஒன்பான்
வரையுள்ள எண்ணுப் பெயரொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  ஒன்றுமுதல்  எட்டுவரை   ஊர்ந்து  நிற்கும்  பஃதென்னும்
சொல், வரும் ஒன்றுமுதல் ஒன்பான் எண்ணுப் பெயர்கட்குமுன் இடைநின்ற
ஆய்தம் கெடுதல் வேண்டும். அவ்விடத்து இன ஒற்றுமிக்கு நிற்கும்.
 

எ-டு:  ஒருபத்தொன்று,  இருபத்தொன்று,  முப்பத்து மூன்று எனவரும்.
ஏனையவற்றொடும் இவ்வாறே கூட்டிக் கொள்க.
 

இவ்ஆய்தம்  மேலே  32ஆம்   சூத்திரத்தான்   விதிக்கப்பட்டதாகும்.
திரிந்ததன்  திரிபு அது  என்னும்  நயத்தான்  ஒன்று  முதலாகிய  பத்தூர்
கிளவி  என்றார். அதிகாரத்தான்  நூற்றொருபத்தொன்று என அடையடுத்து
வரினும் கொள்க.