|
சூ. 478 : | முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் | | ஞநமத் தோன்றினும் யவவந் தியையினும் | | முதனிலை இயற்கை என்மனார் புலவர் | (73) | க-து : | ஒன்று முதலாய எண்ணுப்பெயர்கள் உயிர் முதன்மொழியல்லாத பொருட் பெயர்களொடு புணருமாறு கூறுகின்றது. | பொருள்: நிலைமொழியாக முதற்கண் நிற்கும் எண்ணுப் பெயர்களின் முன் கசதபக்கள் வரினும், ஞநமத் தோன்றினும், யவ வந்தியையினும், மேலே எண்ணுப் பெயர் அளவைப் பெயர்கட்கு ஓதிய இலக்கணத்தனவாகும் எனக்கூறுவர் புலவர். அஃதாவது, ஈறு முதலியன திரிந்தும், திரியாது இயல்பாயும் வருமென்றவாறாம். | எ-டு: ஒருகனி, ஒருசுனை, ஒருதலை, ஒருபகல் எனவும் ஒருஞாண், ஒருநூல், ஒருமணி, ஒருயாழ், ஒருவட்டு எனவும் வரும். இருகனி, சுனை-முக்கனி, சுனை-நாற்கனி, சுனை-ஐங்கனி, சுனை-அறுகனி, சுனை என ஏனையவற்றொடும் ஒட்டிக் கண்டு கொள்க. இவை நிலைமொழி திரிந்து புணர்ந்தன. | இரண்டு கனி, மூன்றுகனி, பத்துக்கனி, நூறுகனி, ஆயிரங்கனி என இவை திரியாது இயல்பாய்ப் புணர்ந்தன. ஏனையவற்றொடும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. | இவற்றுள் ஒன்று என்னும் பெயரும் ஒன்று முதலாய பத்தூர் கிளவியும் திரிந்தே புணரும். ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம் என்பவை திரியாதே புணரும். ஏனையவை இருநிலையாயும் புணருமென ஓர்ந்தறிந்து கொள்க. | இனி ‘‘வந்தது கொண்டு வாராதது முடித்தல்’’ என்னும் உத்தியான், உயிர் முதன்மொழி வருமிடத்து மூன்று முதலாய எண்ணுப் பெயர்கள் திரிந்தும் திரியாதும் முடியும் முடிபுகளையும் ஈண்டே கொள்க. வருமொழி வரைந்து கூறாமல் எழுத்தே பற்றிக் கூறியதனான் வருமொழி எண்ணுப் பெயர்களுக்கும் இம்முடிபு ஒக்குமெனக் கொள்க. | எ-டு: முவ்வணி, நாலணி, ஐயணி, ஆடை, இலை என ஒட்டிக் கண்டு கொள்க. இவை திரிந்து புணர்ந்தன. மூன்றணி, நான்கணி, ஐந்தணி, ஆறணி, எட்டணி இவை திரியாது புணர்ந்தன. ஆறு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு என்பவை உயிர்வரின் ஏறி முடிதலன்றித் திரியா என்க. | இனி முவ்வொன்று, முவ்விரண்டு, மும்மூன்று, நாலிரண்டு, நான்மூன்று, நானான்கு, ஐயிரண்டு, ஐம்மூன்று, ஐந்நான்கு, ஆறிரண்டு, அறுமூன்று, அறுநான்கு, எண்ணிரண்டு, எண்மூன்று என ஏனைய எண்ணுப் பெயரொடும் கூட்டி இருநிலைமையாகவும் புணருமாறு கண்டு கொள்க. | மூயானை -மூவரியணில் என யகரவகரத்தின் மூன் மூன்று என்னும் எண்ணுப் பெயர் முதல் குறுகாது புணர்தலும் கொள்க. இச்சூத்திரத்திற்கு உரையாசிரியன்மார் கூறியுள்ள உரையும் விளக்கமும் குன்றக்கூறல் என்னும் குற்றம் கற்பித்தலாக அமைந்துள்ளமையான் அவை ஒவ்வா என்க. |
|