|
சூ. 479 : | அதனிலை உயிர்க்கும் யாவரு காலையும் | | முதனிலை ஒகரம் ஓவா கும்மே | | ரகரத் துகரம் துவரக் கெடுமே | (74) | க-து: | மேற்கூறியவற்றுள் ஒன்றுஎன்பதற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. | பொருள்: மேற்கூறியாங்கு எண்ணுப் பெயர் புணரும் நிலைமைக்கண், உயிர்முதன்மொழியும் யாமுதன் மொழியும் வருமிடத்து, விதியீறாக நிற்கும் முதனிலை எண்ணாகிய ஒரு என்பதன் ஒகரம் ஓகாரமாகும்; ரகரவொற்றின்மேல் நிற்கும் உகரம் முற்றக் கெடும். | ‘அதன்நிலை’ என்றது, அந்நிலை என்னும் சுட்டுப் பொருட்டாய் நின்றது. | எ-டு: ஓரணி, ஓராடை, ஓரிலை, ஓரீட்டம், ஓருலை, ஓரூசல், ஓரெழுத்து, ஓரேடு, ஓரையம், ஓரொழுக்கம், ஓரோலை, ஓரௌவியம் எனவும், ஓர்யாழ், ஓர்யானை, ஓர் யாமம் எனவும் வரும். ஓரொன்று, ஓரிரண்டு, ஓரைந்து, ஓரெட்டு என எண்ணொடு புணரினும் ஒக்கும். | இனி ஆசிரியர் ஈரசை, ஈரளபு, ஈரியல, ஈரடி, ஈரெழுத்து, ஈரொற்று எனப் பயில வழங்கலான், ‘‘இரண்டென் கிளவியும் அதனோ ரற்றே’’ என ஒரு சூத்திரம் யாத்திருத்தல் வேண்டும். அது காணப்பெறாமையான் ‘மொழிந்த பொருளொடு ஒன்ற அவ்வயின் மொழியாத தனையும் ‘முட்டின்று முடித்தல்’ என்னும் உத்தியான் இரண்டு என்பதன் விதியீறாகிய இரு என்னும் சொல்லின் இகரம் ஈகாரமாய் ரகரத்துகரம் கெட்டு, ஈரணி, ஈராடை............... ஈரௌவியம் எனவும்; ஈர்யாழ், ஈர்யானை எனவும் வருமென அமைத்துக் கொள்க. ஈராண்டு, ஈரைந்து என்பவற்றிற்கும் இஃதொக்கும். |
|