பின்னர்ச் ‘‘செய்யு ளிறுதிப் போலி மொழிவயின்’’ எனக் கூறுதலின் இவை இடைநிற்பவை என்பது பெறப்பட்டது. சேய்க்குன்றம், மலர்க்கொடி, யாழ்ப்பத்தர் என்றாற்போலப் புணர்மொழிக்கண் வருபவை பின்னர்ப் புள்ளி மயங்கியலுள் கூறப்பெறும் விதியான் மிக்குவருவனவாதலின், இயல்பாக வருபவை ஒருசொற்கண்ணேயாம் என்பது தோன்ற ‘‘ஈரொற்று ஆகும்’’ என்றார். |
எ-டு : ஏய்க்கும், வாய்ச்சி, பாய்த்துள், வாய்ப்பு, வேய்ங்குழல், வேய்ஞ்சிறை, ஆய்ந்தான், வேய்ம்புதல் எனவும் ஈர்க்கு, நேர்ச்சி, கீர்த்தி, பார்ப்பு, ஈர்ங்குழல், கூர்ஞ்சிறை, நேர்ந்தான், கூர்ம்பனை எனவும் வாழ்க்கை, சூழ்ச்சி, வாழ்த்து, காழ்ப்பு, பாழ்ங்கிணறு, பாழ்ஞ்சிறை, வாழ்ந்தார், பாழ்ம்மதில் எனவும் வரும். |
உரையாசிரியன்மார் இச்சூத்திரம் மெய்ம்மயக்கவிதி கூறுவதாகக் கொண்டு பொருள்கூறி ஈண்டுவைத்தமைக்கு அமைதியும் கூறுவர். இந்நூல் நெறியையும், மயக்கம் என்பது ஒன்றனொடு ஒன்றுமயங்குதல் என்பதையும் ஓராது, யரழ முன்னர் மொழிமுதல்மெய்யும் ஙகரமும்மயங்குமென ஆசிரியர் ஆண்டுக்கூறியதையும் கருதாது, தமக்குத் தோன்றியவாறு உரை கூறினராவார். இவைபற்றிய பிற விளக்கங்களை எனது மெய்ம்மயக்க ஆய்வுக்கட்டுரையுட் கண்டுணர்க. |