சூ. 480 : | இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் |
| வழங்கியல் மாவென் கிளவி தோன்றின் |
| மகர அளவொடு நிகரலும் உரித்தே |
(75) |
க-து: | இரண்டு முதலாய எண்ணுப் பெயர்கள் மாஎன்னும் ஒருசார் நிலஅளவைப் பெயரொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: இரண்டுமுதல் ஒன்பது வரையுள்ள எண்ணுப் பெயரின்முன், வரையறுத்த நீட்டல் அளவையினைக்குறித்து வழங்கும் ‘மா’ என்னும் சொல் வந்து புணரின், மேலே மகரம் முதலாய மண்டை என்னும் அளவுப் பெயருக்கு ஓதிய விதியை ஒத்தலும் உரித்தாகும். |
அஃதாவது திரிந்து புணர்தலன்றி உம்மையான் திரியாது செஞ்சொல்லாக நின்றும் புணரும் என்றவாறு. |
மா என்பது பலபொருளொரு சொல்லாதலின், ‘வழங்கியல் மா’’ என்றார். மண்டை என்பது முகத்தலளவைப் பெயர். |
ஆசிரியர் முகத்தலளவை, நிறுத்தலளவை, எண்ணலளவைப் பெயர்களையே விதந்து இதுகாறும் விதி கூறிவந்தமையான் வரையறையுடைய இம் ‘மா’ என்னும் நீட்டலளவைப் பெயர் அவற்றுள் அடங்காமை கருதி மண்டை என்னும் முகத்தலளவைப் பெயரொடு மாட்டெறிந்து கூறி, இது இயல்பாயும் புணர்தலான் எதிர்மறை-உம்மை கொடுத்து அமைத்தார் என்க. |
நூறு குழி கொண்டது ஒருமா. ஒரு வேலியின் இருபதிலொருகூறு. |
எ-டு: இருமா, மும்மா, நான்மா, (நாலுமா என்பது வழக்கு) ஐம்மா, ஆறுமா, எண்மா எனவும் இரண்டுமா, மூன்றுமா, நான்குமா, ஐந்துமா, ஆறுமா, எட்டுமா, ஒன்பதுமா எனவும் வரும். எழுமா, ஏழுமா என்பவை ழகர ஈற்றுள் அடங்கும். |
ஒன்றென முடித்தல் என்னும் உத்தியான் பத்துமா, நூறுமா எனவும் ஒருபதுமா, இருபதுமா எனவும் ஆயிரமா எனவும் பிற எண்ணுப் பெயரொடு முடிதலும் கொள்க. |
இனி ஒன்றன் கூறாகிய ஒருமா, இருமா, மும்மா, நான்மா, என்பவற்றை நிலைமொழி வருமொழி செய்து புணர்ப்பினும் இவ்விதி ஒக்குமெனக் கொள்க.மா என்பது இருபதின் ஒருகூறு. |
இரண்டு முதல் ஒன்பானிறுதி என்றதனான் ஒன்றுமா எனவாரா என்க. அதனான், அஃது ஒருமா எனத்திரிந்தே வருதல் பெறப்படும். |