சூ. 481 : | லனஎன வரூஉம் புள்ளி இறுதிமுன் |
| உம்மும் கெழுவும் உளப்படப் பிறவும் |
| அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச் |
| செய்யுட் டொடர்வயின் மெய்பெற நிலையும் |
| வேற்றுமை குறித்த பொருள் வயினான |
(76) |
க-து: | லகாரனகார ஈற்றுச் சொற்கள் சிலவற்றின் முன் ஒருசார் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வேற்றுமை உருபின் பயத்தவாய் நிற்குமென்கின்றது. |
பொருள்: லகரமும் னகரமும் என்னும் புள்ளி யீற்றுப் பெயர்களின் முன், உம் என்னும் இடைச்சொல்லும், கெழு என்னும் உரிச்சொல்லும் உட்பட அவைபோல்வன பிறவும், செய்யுளாகிய தொடரின்கண் அவை வருதற்கொத்த மரபினையுடைய புணர்மொழிகளின் இடையே தோன்றி, வேற்றுமை குறித்த பொருட்புணர்ச்சியினிடத்து அப்பொருண்மை பெறுமாறு நிலைபெறும். |
எ-டு: ‘‘வானவரிவில்லும், திங்களும் போலும்’’ எனவும் ‘‘கல்கெழு கானவர் நல்குறு மகளே’’ (குறுந்-71) எனவும் ‘‘பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே’’ (பொருள்-5) எனவும் ‘‘மாநிதிக் கிழவனும் போன்ம்’’ (அகம்-66) எனவும் ‘‘கான்கெழு நாடன்’’ எனவும் வரும். |
இவை முறையே வானவரிவில்லிடைத் திங்களைப் போலும் எனவும் கல்லினை (மலையை) உடைய கானவர் எனவும் பக்கத்தை உடைய கிளவி எனவும் மாநிதிக் கிழவனைப் போலும் எனவும் கானத்தை உடைய நாடன் எனவும் விரியும். இவற்றுள் உம்மும், கெழுவும், உருபின் பயத்தவாய் நின்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சியின் பொருளைத்தருமாறு கண்டு கொள்க. |
‘கெழு’ என்பதற்குப் பொருந்திய எனப் பொருள் கூறின் அது வினைநிலைப் பட்டவாறாகுமன்றி உரிச்சொல்நிலையினதாகாதென்க. |
இவற்றின் இலக்கணப் பயனைத் தேறாமல் உரையாசிரியன்மார் இவற்றைச் சாரியை என்ப. சாரியை என்பது உருபினை நிலைமொழியொடு இணைப்பதற்கு வருவதாகும். இவை உருபின் பயத்தவாயும் சொல்லுருபாயும் நிற்றலின் சாரியை என்றற் கேலாமையறிக. |
‘உம்’ என்பது எண்ணுப்பொருளும் எச்சப் பொருளும் பயவாமல் இரண்டாவதற்கும் ஏழாவதற்கும் உரிய உருபின் பொருள் தோன்ற நிற்றலையும், கெழு என்பது கெழுமுதல் (பொருந்துதல்) என்னும் பொருள் பயவாமல் ஆறாவதன் பொருள் தோன்ற நிற்றலையும் ஓர்ந்துணர்க. |
இச்சூத்திரம், புணர்ச்சி விதிகூறாது உருபின் பயத்தவாய் வருமென்று கூறலான் இஃது தொகைமரபின்கண் இருத்தல் வேண்டும். இப்பிறழ்ச்சி உரையாசிரியன்மார் காலத்திற்கு முன்னரே நிகழ்ந்திருத்தல் வேண்டுமெனத் தெரிகின்றது. |