|
சூ. 482 : | உயிரும் புள்ளியும் இறுதி யாகிக் | | குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி | | நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும் | | உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின் | | ஐம்பா லறியும் பண்புதொகு மொழியும் | | செய்யும் செய்த என்னும் கிளவியின் | | மெய்ஒருங் கியலும் தொழில்தொகு மொழியும் | | தம்மியல் கிளப்பின் தம்முன்தாம் வரூஉம் | | எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும் | | அன்னவை எல்லாம் மருவின் பாத்திய | | புணரியல் நிலையிடை உணரத் தோன்றா | (77) | க-து: | புணரியல் முதலாய ஆறு ஓத்துக்களுக்கும் புறனடையாக நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படாதவை இவை என்றும் அதற்குக் காரணமும் கூறுகின்றது. | பொருள்: சொல்லுங்காலை, உயிர் எழுத்து இறுதியாயும் புள்ளி எழுத்து இறுதியாயும் குறிப்பின்கண்ணும் பண்பின் கண்ணும் இசையின் கண்ணும் தோன்றிப் பெயரினும் வினையினும் நிலைதடுமாறியும், ஒருசொல் பலபொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரிமை தோன்றியும் இங்ஙனம் ஒரு நெறிப்பட வாராத நிரம்பாஉரிச் சொல்லாகிய குறைச்சொற்களும், உயர்திணை, அஃறிணை ஆகிய அவ்விரண்டன் மருங்காகி ஐம்பாலினையும் அறியவரும் பண்புத்தொகைச் சொற்களும், செய்யும் செய்த என உம்மீறும் அகரஈறுமாய் முறையே நிகழ்வும் எதிர்வும் இறப்புமாகிய காலப் பொருளைத்தரும் இறுதிகள் ஒருங்கேதொக்கு வரும் வினைத்தொகைச் சொற்களும், தமக்குமுன் தாமே வந்து பொருள் வேறுபட ஒன்றி நிற்கும் எண்ணுப் பெயர் தொக்க தொகைச்சொற்களும் ஆகிய இவற்றின் இயல்புகளை விளக்கப்புகின் அவையெல்லாம் புணரியல் நிலைமைக்கண் நிறுத்த சொல்லும் குறித்துவருகிளவியுமாக முழுமை பெற்று விளங்கத் தோன்றாமையான் அவையெல்லாம் ஒருசொல் நீர்மையுடையனவாக மருவிவந்த வழக்கினையுடைய பகுதியினவாகும். | எனவே, அவற்றைப் பிரித்துப் புணர்ச்சிவிதி காணலும் கூறலும் கூடா என்பதாம். | வரலாறு : பசப்பு, பசலை, பசத்தல், பசந்தாள், பசந்து, பசந்த, பசவா எனப் பெயர்க்கும் வினைக்கும் முதனிலையாக வரும் பச என்னும் உரிச்சொல்லிற்கு அடியாகக் குறிப்புப் பற்றி வருவது ‘பச்’ என்னும் குறைச் சொல்லாகும்., | உவப்பு, உவகை, உவந்தான், உவந்து, உவந்த, உவவா என்னும் பெயர்க்கும் வினைக்கும் முதனிலையாக வரும் ‘உவ’ என்னும் உரிச்சொற்கு அடியாகக் குறிப்புப்பற்றி வருவது உவ் என்னும் குறைச்சொல்லாகும். கார், கரி, கருப்பு, கருமை, கருத்தல், கரிந்தான், கரிந்து, கரிந்த, கரியா எனப் பெயர் வினைகட்கு முதனிலையாக வரும் கருவென்னும் உரிச்சொல்லின் அடி பண்பு பற்றி வரும் ‘கர்’ என்னும் குறைச்சொல்லாகும். | ஆர்வம், ஆர்ப்பு, ஆர்த்தல், ஆர்த்தான், ஆர்த்து, ஆர்த்த, ஆர்த்திலா எனப் பெயர் வினைகட்கு முதனிலையாக வரும் ‘ஆர்’ என்னும் உரிச் சொல்லிற்கு அடி இசைபற்றி வரும் ‘அர்’ என்னும் குறைச் சொல்லாகும். | அங்ஙனம் நிற்கும் பச், உவ், கர், அர் என்னும் குறைச் சொற்கள் மேல் வந்த இடைச் சொல்லொடு (அகர உகரம்) கூடியும் நீண்டும் (அர், ஆர்) பச உவ கரு ஆர் என நிற்பவை நிலைமொழி வருமொழி செய்து புணர்க்க இயலாமல் மரூஉமுடிபு போல நிற்றலின் அவ்வாறு வருவனவற்றையெல்லாம் மருவின் பாத்திய என்றார். | இங்ஙனமாக ஒருமொழிப் புணர்ச்சியாய்ப் பால்காட்டும் ஈறுகளொடும், காலங்காட்டும் உறுப்புக்களொடும் இணைந்து நாடன், ஊரன், வந்தான், கண்டான் என வருவனவும் பிரித்துப் புணர்க்கப்படா என்பது போதரும். | அடிநிலையாகிய குறைச் சொற்கள் பொருந்தும் எழுத்துக்களைப் பெற்று நிரம்பிப் பெயர் வினைகளின்பாற்படுதற்குரியவாய் உரு, குரு, அலமரல், தெருமரல், அதிர்வு, விதிர்ப்பு, தட, கய, நளி, உறு, தவ என நிற்பின், உருகெழு கடவுள், குருமணித்தாலி, அலமரலாயம் எனவும்; மன அதிர்வு கைவிதிர்ப்பு எனவும் நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப் பெறும் என்க. | இதற்கு உரையாசிரியன்மார் கூறும் விளக்கமும் எடுத்துக்காட்டுக்களும் இந்நூல் நெறிக்குப் பொருந்துவன அல்ல. | இனிக் கரும்பார்ப்பான், கரும்பார்ப்பனி, கரும்பார்ப்பார், கருங்குதிரை, கருங்குதிரைகள் எனப் பண்புத்தொகைமொழிகளுள் ‘கரும்’ என்னும் குறைச்சொல்-கரியன், கரியள், கரியர், கரியது, கரியவை எனப் பின்மொழிக் கேற்பப் பொருள்தந்து பாலுணர்த்தும். பிரிந்து நின்றவழி அஃது பாலுணர்த்துதற்கு ஏலாமையான் பண்புத் தொகைகளின் முதனிலைச் சொற்கள் மருவின் பாத்தியவாதல் காண்க. | வெற்றிலை, பாசடை என்னும் தொகை மொழிகளின் முதனிலைகள் வெறுவிதாகிய, பசியதாகிய எனப் பொருள் தரும். முதனிலைகள் பிரிந்து நிற்பின் அப்பொருள் தெற்றெனப் பயவாமை காண்க; ஆயன், சாத்தன் எனத் தொக்கவழி ஒருபொருளை உணர்த்தும்; பிரிந்தவழி ஆயனும் சாத்தனும் என இருபொருளை உணர்த்தி வேறுபடுமாறும் கண்டுகொள்க. | இனி ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள், கொல்யானை, செல்செலவு; என்னும் அறுவகை வினைத்தொகை மொழிகள் தொக்கவழிச் செய்யும், செய்த என்னும் காலமுணர்த்தும் ஈறுகளைத் தம்முள் அடக்கி இடத்திற்கேற்ப ஒருகாலத்தை உணர்த்தலானும் பிரிந்தவழி அவை முதனிலைத் தொழிற்பெயராய் அமைதலின் காலமுணர்த்தற்கு ஏலாமையானும் அவையும் பிரித்துப் புணர்க்கப்படா என்றார். | இனி ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நன்னான்கு, அவ்வைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, ஒன்னொன்பது, பப்பத்து என அளவைப்பொருட்டாய் வழக்கின்கண் தம்முன் தாம்வரும் எண்ணுப் பெயர்களின் நிலைமொழி வரையறையின்றித் திரிந்து நிற்றலின் அவையும் பிரித்துப் புணர்க்கப்படா என்றார். | ஓரொன்று, ஈரிரண்டு, மும்மூன்று, நானான்கு, ஐயைந்து எனவரின் புணர்க்கப்படும். இவை உறழ்ச்சிப் பொருள்பற்றி நிற்கும். | இனி, அன்னபிறவும் என்றதனான் அவன், இவன், உவன், கண்ணன், கரியன், உண்டான், தின்றான் எனப் பெயரும் வினையுமாக வரும். ஒருமொழிப் புணர்ச்சியுள் முதனிலைகள் பிரிந்து நின்று புணர்தற்கு இயலுமாயினும் இறுதிநிலைகள் இடைச் சொல்லாதலின் தனித்துநில்லா. எனவே இவைபோல்வனவும் பிரித்துப் புணர்க்கப்படா என்க. | இன்னும் இதனானே சாரியை இடைச்சொல்லையும் உருபிடைச் சொல்லையும் தத்தம் பொருளவாய் வரும் இடைச்சொற்களுள் தனித்து வாராதனவற்றையும் நிலைமொழியொடு கூட்டி நிறுத்திப் புணர்ப்பதல்லது பிரித்துப் புணர்க்கப்படாதென்பதும், அனகன், அநபாயன் என்றாற்போல வரும் வடசொற்களின் எதிர்மறையாய முதனிலைகளும் பிரித்துப் புணர்க்கப்படா என்பதும் அறிந்து கொள்க. | குறைச்சொல்லாக நிற்கும் நிரம்பா உரிச்சொல்லையும், பெயர் வினைகட்கு முதனிலையாக நிற்கும் நிரம்பிய உரிச்சொல்லையும் பற்றியவிளக்கங்களை உரியியலுள் கண்டுகொள்க. |
|