சூ. 483 :

கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்

வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்

விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்

வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்

நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்

(78)
 

க-து :

இவ்      அதிகாரத்துள்       எடுத்தோதிய      இலக்கணச்
சூத்திரங்களானும் அவற்றின் மிகையானும் உத்தியானும் முடியாது
சிறுபான்மை வேறுபட நிற்பவற்றை எல்லாம் இருவகை வழக்கும்
நோக்கி அமைத்து முடித்துக்  கொள்க என அதிகாரப் புறனடை
கூறுகின்றது.
 

பொருள்:  இவ்வதிகாரத்துக் கிளந்து  ஓதப்பட்டவை  யல்லாதனவாய்ச்
செய்யுளின்கண்   திரிந்து  முடிவனவும்,  இருவகை   வழக்கின்  கண்ணும்
வழங்குமிடத்தான் மருவித் திரிவனவும், இவ்வதிகாரத்துக் கூறிய  இலக்கண
மரபினின்று வேறுபடக்காணின் அவற்றை நல்லளவையாகிய ஆராய்ச்சியான்
வழக்கு  நடக்குமிடத்தை  உணர்ந்து,  கூறப்பெற்ற  இலக்கண  நெறியொடு
பொருந்த நடத்துக என்று கூறுவர் புலவர். மதி=அளவு,  ஒழுக்கல்  என்றது
கற்பிக்கும் ஆசிரியரை நோக்கிக் கூறியதாம்.
 

எ-டு:  (1) தடவுத்திரை - தடவுநிலைக்கொன்றை  என   அகர   ஈற்று
உரிச்சொல்  உகரம் பெற்று வந்தது. தடந்தோள் என மெல்லெழுத்து மிக்கு
வந்தது.
 

2) தெம்முனை எனத்தெவ் என்னும் உரிச்சொல் திரிந்து வந்தது.
3) அதவத்    தீங்கனி  என  அகரஈற்று  மரப்பெயர்  அத்துச்சாரியை
பெற்றது.
4) நறவங்கண்ணி - குரவநீடிய  என ஆகாரஈறு குறுகி அம்முச் சாரியை
பெற்றது.
5) இரவழங்கு சிறுநெறி (அக-318) என ஆகாரஈறு குறுகி உகரம் பெறாது
வந்தது.
6) கள்ளியங்காட்ட,  புள்ளியம்பொறிக்கலை   (அக-97)  என  இகரஈறு
அம்முச்சாரியை பெற்று வந்தது.
7) நல்லொழுக்கங் காக்குந் திருவத்தவர்  (நாலடி-57)  என  உகர  ஈறு
அத்துச்சாரியை பெற்றது.
8) அஞ்செவி நிறைய வாலின  (முல்லை-89) என அகம் என்னும் சொல்
இடைகுன்றி வந்தது.
9) மரவம்பாவை என மகரஈறு கெட்டு அம்முப்பெற்று வந்தது.
10) கானம்பாடினேமாக,  (புறம்-144)   பொன்னந்திகிரி   (புறம்-365) என
னகரஈறு அம்முச்சாரியை பெற்று வந்தது.
11) வேர்பிணி வெதிரத்துக்கால் பொருநரலிசை (நற்றிணை-62) என  ரகர
ஈறு அத்துச் சாரியை பெற்று வந்தது.
12) அவ்விடை என்பது ஆயிடை இருபேராண்மை செய்த பூசல் (குறு-43)
எனத்திரிந்து வந்தது.
13) நாவலந்   தண்பொழில் (பெரும்பாண்-465)  கானலம்   பெருந்துறை,
நெய்தலஞ்சிறுபறை என லகர ஈறு அம்முச்சாரியையொடு வந்தது.
14) கையகத்து என்பது கைத்துண்டாம் போழ்தே அறஞ்செய்க என
மருவி வந்தது.
 

இங்ஙனம்   ஓசை   முதலாய    நயத்தானும்   ஒப்புமையாக்கத்தானும் இருவழியும் வேறுபட்டு வருவனவெல்லாம் இடம் நோக்கி அறிந்து கொள்க.
 

இன்னும் (சோழன்நாடு) சோணாடு (மலையமான்நாடு) மலாடு (பொதுவில்)
பொதியில் என்றாற் போல  எடுத்தோதானவாய்  வரும்  மரூஉ  மரபுகளை எல்லாம் இதனான் அமைத்துக் கொள்க.
 

குற்றியலுகரப் புணரியல் முற்றியது.

தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்

ஆராய்ச்சிக் காண்டிகையுரை நிறைந்தது.