சூ. 49 :

அவற்றுள்

ரகார ழகாரம் குற்றொற் றாகா 

(16)
 

க-து:

மேற்கூறியவற்றுள் இரண்டற்கு ஒருமருங்கு விலக்குக் கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறியவற்றுள்   முன்னிற்பன   மூன்றனுள்,   ரகரமும்
ழகரமும்   கசதப   ஙஞநம   என்பவற்றொடு    இணைந்து   வருங்கால்
தனிக்குற்றெழுத்தினைச் சார்ந்து நிற்றற்காகா.
 

எனவே  இவை  நெட்டெழுத்தைச்  சார்ந்து  வருதற்காகும்  என்பதும்
யகரம்  குற்றெழுத்தையும்  சார்ந்து  வருதற்காகும்  என்பதும்  பெறப்படும்.
இதனானும்   மேற்கூறிய  சூத்திரம்  தனிமொழிக்கண்  ஒற்றெழுத்துக்களின்
நிலைபற்றியதென்பது புலப்படும்.
 

எ-டு :  ரகர ழகரம் நெட்டெழுத்தைச் சார்ந்து வருதல்மேற் காட்டப்
பெற்றது.   துய்க்க,  பொய்ச்சூள்,  நெய்த்தோர்,   துய்ப்பு,   அய்ங்கணை,
அய்ஞ்சுனை,   உய்ந்தார்,   மொய்ம்பு   என   யகரம்   குற்றெழுத்தைச்
சார்ந்து  வருமாறு  கண்டுகொள்க.  அய்ங்கணை  அய்ஞ்சுனை  என்பவை
ஐகாரத்தின் போலியாய்வந்த பண்புத்தொகை மொழிகள்.
 

இனி  நிகர்க்கும், கவர்ச்சி,  உவர்த்தல், துவர்ப்பு  எனவும் முகிழ்க்கும்,
மகிழ்ச்சி, நிகழ்த்தும்,  கவிழ்ப்பார்,  திகழ்ந்தார்  எனவும்  குற்றெழுத்தைச்
சார்ந்து வருதலின் ‘‘அகா’’ எனவிலக்கியது பொருந்துமாறு என்னையெனின்,
இவை  தனிக்குறில்   அல்லாமையான்   பொருந்துமென்க.  இணைக்குறில்
ஓசையான்  நெட்டெழுத்தியல்பின வாகும்  என்பது,  வரும்  சூத்திரத்தாற்
பெறப்படும்.
 

அற்றாயின்  ‘‘ரகரழகரந்   தனிக்குற்றொற்றாகா’’   என்றாற்   போலக்
கூறியிருப்பின் தொடர்மொழிக்கண் வரும் என்பதுதானே பெறப்படுமாகலான்
இங்ஙனங்கூறியது      என்னையெனின்?       அங்ஙனம்       கூறின்
தொடர்மொழியெல்லாம்  ‘‘நெட்டெழுத்தியல’’  என்னும்  விதி  இவற்றிற்கு
எய்தாதொழியுமென்க.