|
சூ. 50 : | குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின் | | தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல | (17) | க-து: | ஓசை பற்றித் தொடர் மொழிகட்காவதோரியல்பு கூறுமுகத்தான் புள்ளி மயங்கியலையும், செய்யுளியலையும் நோக்கியதொரு கருவி கூறுகின்றது. |
பொருள்: குற்றெழுத்து நெட்டெழுத்தென்னும் குறியீடுகளைத் தொல்லாசிரியன்மார் மாத்திரையளவையாற் கொள்ளுதலான் ஓராற்றான் தொடர்மொழிகள் எல்லாம் செய்கைப்படுமிடத்து நெட்டெழுத்து இயல்பினவாகும். | ‘நெட்டெழுத்தியல’ என்றது நெட்டெழுத்துப் போலும் இயல என்றவாறு. ஆதலின் கவர்ச்சி, புகழ்ச்சி என்பவற்றின் முதனிலைகளாய கவர்-புகழ் என்னும் குறிலிணை ஒற்றுக்கள் நெடிற்கீழ் ஒற்றுப்போலக் கொள்ளப்படும். அதனானன்றே நிகர், பகல், துகள் என்றாற்போல்வன நேர், பால், தூள் எனத் திரிவனவாயின. | இதன் பயனாவது, தொகைமரபின்கண் ‘‘நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும் குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட்டலும் அறியத் தோன்றிய நெறியிய லென்ப’’ (தொகைமரபு-18) என்னுஞ் சூத்திரத்து ‘‘நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும்’’ என்ற விதி, கோல் + தீது = கோறீது, கோல் + நன்று = கோனன்று; வேள் + தீயன் = வேடீயன். வேள் + நல்லன் = வேணல்லன் எனவரும் நெடிற்கீழ் ஒற்றிற் கேயன்றிக், கனல் + தீது = கனறீது, புனல் + நன்று = புனனன்று; துகள் + தீது = துகடீது, துகள் + நன்று = துகணன்று எனவரும் குறிலிணைக்கீழ் ஒற்றிற்கும்; தோன்றல் + தீயன் = தோன்றறீயன்; தோன்றல் + நல்லன் = தோன்றனல்லன். காந்தள் + தீது = காந்தடீது. காந்தள் + நன்று = காந்தணன்று எனவரும் தொடர்மொழிகளுள் குற்றெழுத்தின் பின்னின்ற ஒற்றிற்கும் பொருந்து மென உணர்த்துதலாம். இங்ஙனம் வருவனவெல்லாம் அடங்கற்குத் தொடர்மொழி ‘எல்லாம்’ என விளங்கக்கூறினார் என அறிக. |
|