சூ. 51 :

செய்யு ளிறுதிப் போலி மொழிவயின்

னகார மகாரம் ஈறொற் றாகும் 

(18)
 

க-து:

ஒருமொழிக்கு    இடையேயன்றி    ஈற்றினும்   ஈரொற்றுக்கள்
இணைந்துவரும் என்கின்றது.
 

பொருள்:  செய்யுள்வழக்கின்கண் போலி    மொழிவயின்   னகரமும்
மகரமும் இணைந்து இறுதிக்கண் ஈரொற்றாக வரும்.
 

எ-டு:  ‘‘திசையறி  மீகானும் போன்ம்’’ எனவும் ‘‘பெருங்கல்லாடரும்
போன்ம்’’ எனவும் வரும். ஈண்டுக்கூறியது போலும் என்னும்  இடைச்சொல்
என்பது  விளங்கப்   போலி  மொழிவயின்  என்றார்.  இதனை  ‘‘ஒப்பில்
போலியும் அப்பொருட் டாகும்’’ (இடை - 30)  என்பதானறிக.  செய்யுளுள்
எனவே இது விகாரவகையான் அமைந்த சொல் என்பதும் புலனாகும்.
 

போலும் என்னும்  இவ்விடைச்சொல் வடிவத்தான்  ‘‘செய்யும்’’ என்னும்
முற்றுப்போறலின்,   செய்யுமென்னும்  முற்று  வாய்பாட்டான்  வரும்  பிற
சொற்களும்   விகாரப்பட்டு    ஈரொற்றாய்     இறுதிக்கண்    வருதலை
‘‘உரையிற்கோடல்’’ என்னும்  உத்தியாற்   கொள்க.  எ-டு  மருளினும்
எல்லாம் மருண்ம், கட்சியுட் காரி கலுழ்ம் எனவரும்.