சூ. 52 :னகாரை முன்னர் மகாரங் குறுகும் 
(19)
 

க-து:

இசையிடனருகும் (நூன்-13) என்ற மகரம் குறுகிவரும் ஒருசார்
இடங்கூறுகின்றது.
 

பொருள்:   செய்யுளுள் சொல்லிறுதிக்கண் ஈரொற்றாய்   நிற்குமென்ற
னகரத்தின்  முன்னிற்கும்  மகரம்  தன்   அரைமாத்திரையிற்    குறுகும்.
எ-டு :போன்ம் எனவரும்.
 

மேலைச்   சூத்திரத்து  உரையிற்  கோடலாற்   கொண்ட   ‘மருண்ம்’
என்பதன்கண் உள்ள ணகரத்தின் முன்னரும் குறுகுமெனக் கொள்க.
 

அவ்வழிக், கலுழ்ம்,  செய்ம்  என்றாற்  போல்வனவற்றுள்வரும்  மகரம்
குறுகாதென்க  என்னை?   ஆண்டு  மகரத்தின்  மேல்  நிற்பவை  இடை
எழுத்தாகலின்  என்க.   அதனான்   மெல்லினம்   மகரம்   குறுகுதற்குச்
சார்பென்பது புலப்படும்.
 

ஈரொற்று    உடனிலை     அதிகாரப்பட்டமையானும்    இக்குறுக்கம்
தனிமொழியிடத்      ததாகலானும்       ஈண்டுவைத்தோதப்பட்டதென்க.
பிறிதொருசார்  மகரக்குறுக்கம்   புணர்ச்சி  விகாரத்தாலாவது   ஆகலின்
அதனை ‘‘வகார மியையின் மகாரங்  குறுகும்’’  எனப்புள்ளி  மயங்கியலுட்
கூறுவார்.
 

அதனானும் மொழிக்கண் நிற்கும் எழுத்துப்பற்றியே மொழி  மரபின்கண்
ஆசிரியர் இலக்கணங்கூறுகின்றார் என்பது தெளிவாகும்.