|
சூ. 53 : | மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்து வேறிசைப்பினும் | | எழுத்தியல் திரியா என்மனார் புலவர் | (20) | க-து: | அளவானும் தன்மையானும் உயிர், மெய், புள்ளி, உயிர்மெய், குறில், நெடில், வலி, மெலி, இடை, சார்பு என ஓதப்பெற்ற இலக்கணத்தையுடைய எழுத்துக்கள் ஓரெழுத்தொரு மொழிமுதலாக ஆக்கம் பெற்றுத் தொடர்ந்து இசைக்குங்கால் இருவகைவழக்கினும் உயிர்எழுத்துக்கள் பண்டமாற்று, விளி முதலியவற்றின்கண் மிக்கும், கூற்றுவயின் (இடை - 38) குறுகியும், மெய்யெழுத்துக்கள் தம் முன்னின்ற புள்ளிகளொடு மயங்குங்கால் திரிந்தும் இசைத்தலின் தனியெழுத்திற்கு ஓதப்பட்ட இலக்கணங்கள் மொழிக்கட்படுங்கால் வேறுபடுங்கொல் என நிகழும் ஐயமகற்றுகின்றது. |
பொருள்:நூன்மரபிற் கூறப்பெற்ற முப்பத்துமூன்று எழுத்துக்களையும் மொழியின் கண்ணே அமைத்துச் சொல்லாக இசைக்குமிடத்தும், அவற்றைத் தனித்தனி வேறுபடுத்திச் சுட்டி எழுத்தாக இசைக்குமிடத்தும் அவ்வவ் எழுத்துக்கட்கு உரிய இலக்கண வரையறை திரியா என்று கூறுவர் புலவர். | எ-டு | ‘‘சுடர்த்தொடீ கேளாய்’’ கடல் போற்றோன்றல | காடிறந்தோரே’’ எனவும், மக்கள்-பொங்கல் நல்கல் முகம் அஃகம் எனவும், அருளல்லதியாதெனின், அழுக்காறென ஒருபாவி எனவும் வந்தனவற்றுள், சுடர்த்தொடீ என விளித்த வழி ‘டீ’ என்னும் எழுத்துத் தோழி நிற்கும் சேய்மைக்கு ஏற்ப டீஇ என மிக்கிசைப்பினும், அதுவல்லின உயிர்மெய்நெடில் இரண்டு மாத்திரை என்னும் இலக்கணமும், காடிறந்தோரே ‘ரே’ என்பது கூற்றுவயின் ஓரளபாக இசைப்பினும் அஃது இடையின உயிர் மெய் நெடில்-இரண்டு மாத்திரை என்னும் இலக்கணமும் மாறுபடல் இல்லை. அவ்வாறே மக்கள்,பொங்கல்,நல்கல், முகம், அஃகம் என்பனவற்றுள்ின்ற ககரம், மேல் நின்ற புள்ளிகளான் ஓசைதிரிந்து நிற்பினும் அது வல்லின உயிர்மெய்க்குறில் ஒரு மாத்திரை என்னும் இலக்கணத்திற்றிரிதலில்லை. ஆடியாது, கொக்குக்குறிது - என்பவற்றுள் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஓசைகுன்றி நிற்பினும், சுஃறென்னும் என்பதனுள் ஆய்தம் ஓசைமிக்குநிற்பினும் அவை சார்பெழுத்து என்னும் இலக்கணத்தில்திரிதலில்லை. இனி அருளல்லதியாதெனின் - அழுக்காறென ஒருபாவி எனச் செய்யுட்கண் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் எண்ணப்பெறாமலும், குற்றியலுகரம் வடிவு திரிந்தும், தோன்றாமல் மறைந்தும் மாத்திரையிழந்தும் நிற்பினும், அருளல்லது எனவும் அழுக்காறு எனவும் பொருள் திரியாது நிற்றலின் சார்பெழுத்தென்னும் இலக்கணமும் அரைமாத்திரை என்னும் இலக்கணமும் திரிதல் இல்லை என்க. | இவ்ஐயம் மொழிப்படுத்து இசைக்குங்காலத்தன்றி நிகழாமையான் இதனை மொழிமரபின்கண் வைத்தோதினார் என்க. |
|