சூ. 54 :அகர இகரம் ஐகார மாகும் 
(21)
 

க-து:

ஒத்தபொருள் பயந்துவரும் மாற்றெழுத்துக்கள் மொழிமுதற்கண்
அமைந்து நிற்குமாறு கூறுகின்றது.
 

பொருள்:மொழிமுதற்கண் அகரமும் இகரமும் இணைந்து ஐகாரத்திற்கு
மாற்றெழுத்துக்களாகும்.    மாற்றெழுத்தினைப்   போலி    எழுத்தென்பது
இடைக்கால வழக்காகும்.
 

எ-டு:  ஐவனம்  என்பது அயிவனம் எனவரும். ‘‘உடம்படு   மெய்’’
யின்றிவருதல்  சான்றோர்   வழக்கின்கண்  காணப்பெறாமையின்  பெற்றே
வருமென்க. செய்யுளீட்டச்சொல்லாக, வைரம்-வயிரம்;  கைலை-கயிலை என
வடசொற்கள் மாற்றெழுத்துப் பெற்றுவரும்.