சூ. 55 :அகர உகரம் ஒளகார மாகும் 
(22)
 

க-து:

இதுவுமது.
 

பொருள்:  மொழிமுதற்கண்  அகரமும்    உகரமும்       இணைந்து
ஒளகாரத்திற்கு மாற்றெழுத்துக்களாகும்.
 

எ-டு :  கௌரியர்-கவுரியர்  எனவும்  மௌரியர்-மவுரியர்  எனவும்
வரும்  (மவுரியர்  என்பது  மோரியர்  எனத்திரிந்து வருதல்   மரூஉவாம்)
மௌலி-மவுலி;   ஒளடதம்-அவுடதம்   என   வடசொற்கள்  எழுத்தொடு
புணர்ந்தும் சிதைந்தும் வரும்.
 

அடுத்துவரும்    ‘‘அகரத்திம்பர்’’   என்பதனானும்,   இகர    யகரம்
‘‘இறுதிவிரவும்’’ என்பதனானும் இவை இரண்டு சூத்திரமும் முதற்கண் வரும்
மாற்றெழுத்துப்பற்றியவை என்பது பெறப்படும்.
 

செய்யுளீட்டச்சொல்  நான்கனுள்   வடசொல்லும்  ஒன்று  ஆகலானும்,
ஆரியந்திரிந்து   சிதைந்து    வரும்   சொற்களுள்    இயைந்தனவற்றை
வடசொல்லாக  ஏற்கலாமெனத்   தொல்லாசிரியர்   உடன்பட்டமையானும்,
ஒருசார் வடசொற்கள் சான்றோர்  வழக்கினுள்ளும்  பயின்று  வருதலானும்
ஆசிரியர்  இவ்விலக்கணத்தைக்   கூறினார்   என   அறிக.   அன்றியும்
செய்யுட்கண்  நிரையசை  எதுகையாக  வருமிடத்து  ஐகார  ஒளகாரங்கள்
நிரையசையாதற்பொருட்டு இவ்விலக்கணம் வேண்டப்பட்டதென்க.
 

எ-டு :

“பயிலுவர் முனிவர்தம் பாசம் வீடுறக்

கயிலையங் கிரிவளர் கடவுள் நாமமே’’ எனவும்

“கவினுறு செந்தமிழ்க் காதல் மேவலால்

கவுரியர் மருகனாய்க் கண்ணுதல் வந்ததே”

எனவும் வரும்.
 

கைலை என்னும் தேமா  கணவிரியாயும்   கௌரியர்   என்னும்   பாதிரி,
கணவிரியாயும்  அசைநிறைத்து   எதுகையாயினமை    கண்டு    கொள்க.
எழுத்துக்கள் ஒன்றற்கு  ஒன்று  மாற்றாக  வருதலை  ஆசிரியர்  மயக்கம்
என்னும்        பெயரானும்      கூறுவார்.      இதனை      ‘‘மகரத்
தொடர்மொழி       மயங்குதல்        வரைந்த     னகரத்    தொடர்
மொழி ஒன்பஃ தென்ப’’ எனவரும் நூற்பாவானறியலாம்.  இம்மயக்கத்தைப்
போலி என உரையாசிரியன்மார்  கூறியவதனான் அவர்தம் உரைவழிநின்று
நூல்செய்த பவணந்தியார் போலி என்றே இலக்கணம் செய்தார்.
 

இம்மாற்றெழுத்திலக்கண   நுண்மையுணராமல்   அகரமும்    இகரமும்
சேர்ந்து   ஐகாரம்   உண்டாயிற்று  என  விபரீத  விளக்கம்   கொள்வர்
இக்காலத்து ஒருசாரார். இவை எல்லாம் இந்நூல்  நெறிக்கொவ்வா என்பதை
எனது ‘‘ஐகார ஒளகாரங்கள்’’ என்னும் கட்டுரையில் காண்க.