சூ. 56 :

அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் 

(23)
 

க-து:

இடையினும் ஈற்றினும் வரும் ஐகாரத்திற்குப் பிறிதொருவகை
மாற்றெழுத்தாமாறு கூறுகின்றது.
 

பொருள்:அகரத்தின்பின் இகரமேயன்றி, அகரமும் அதன் பின் நிற்கும்
யகர ஒற்றும் ஐ என்னும் நெட்டெழுத்தினது பொருள் படத் தோன்றிவரும்.
 

‘புள்ளியும்’  என்ற  எச்ச  உம்மை மேற்சூத்திரத்து  இகரத்தைச்  சுட்டி
நின்றது. அதனான்   இகரமும்  யகரப்புள்ளியும்  ஓசை  ஒற்றுமையுடைமை
பெறப்படும்.
 

எ-டு : நிலையம்-நிலயம்.  குவளை - குவளய். வினையம் - வினயம்.
வழுதுணை-வழுதுணய் எனவரும்.
 

அய் என்னும் இவை மொழிமுதல்  ஐகாரத்திற்கு  மாற்றெழுத்துக்களாய்
வரின்  மாத்திரையளவு  வேறுபடுதலன்றி  ஓசையானும்,  அசைகொள்ளும்
நிலையானும் வேறுபடாமையான் இவை இடையினும் ஈற்றினும்  வருமென்று
உய்த்துணர்க.
 

மொழிமுதற்கண்ணன்றி  இடையினும்  ஈற்றினும்  வராத ஒளகாரத்திற்கு
அகரத்திம்பர்  வகரப்புள்ளி   மாற்றெழுத்தாக   வரும்   என  ஆசிரியர்
கூறாமையானும்  இது   புலனாகும்.  இடைக்காலத்தாரும்  பிற்காலத்தாரும்
இந்நுண்மையை  ஓராமல்,   ‘‘கய்வேல்   களிற்றொடு  போக்கி  வருபவன்
மெய்வேல்  பறியா  நகும்’’  எனவும்  ‘‘அவ்வித்  தழுக்காறு  டையானைச்
செய்யவள் தவ்வையைக் காட்டி  விடும்’’  எனவும் வரிவடிவின்கண் எதுகை
ஒப்புமைக்கருதிப் பயனின்றித் திரித்து எழுதிக்கொள்வாராயினர்.
 

இனி  இம்(அய்)   மாற்றெழுத்தின்   பயனாவது  செய்யுட்கண்  சீரும்
தளையும் தொடையும் சிதையவரின் சிதையாமற்செய்து கோடலாம்.
 

எ-டு :  ‘‘அன்னையையான்   நோவ   தவமால்      அணியிழாய
புன்னையையான்  நோவன் புலந்து’’  என்னும்  இக்குறள்   வெண்பாவின்
முதற்சீர் அன், னை, யை, யான்  என  நாலசையாக  நின்று  சீர்சிதைதலை
அன்னயையான் என மாற்றெழுத்தாற் கூறிச் சிதையாமற் செய்தலாம்.