சூ. 57 : | ஓரள பாகும் இடனுமா ருண்டே |
| தேருங் காலை மொழிவயி னா |
(24) |
க-து: | அய் என்னும் மாற்றெழுத்திற்கு மாத்திரை பற்றிப் புறனடை கூறுகின்றது. |
பொருள்: மொழிக்கண் மேற்கூறிய அய் என்னும் மாற்றெழுத்துக்கள் வருமிடங்களை ஆராயுமிடத்து அவை ஒரு மாத்திரையளவினவாய் நிற்குமிடமும் உண்டு. |
குறிலும் புள்ளியுமாக ஒன்றரை மாத்திரையளவினவாய் நிற்கும் நிலையே யன்றி ஓரளபாகும் இடனும் உண்டு என்பது பொருளாகலின் உம்மை எச்சஉம்மை. ஏகாரம் ஈற்றசை. இடையே மாற்றெழுத்தாக நிற்கும் ‘அய்’ என்பதன்முன் உயிர்வரின் ஏறி உயிர்மெய்யாய் விடுதலின் ஆண்டு ஒருமாத்திரையும், உயிரல்லாத புள்ளியோ உயிர்மெய்யோவரின் ஒன்றரை மாத்திரையும் பெறுமாதலின் ‘‘தேருங் காலை மொழிவயி னான’’ என்றார். அதனான் எய்தும் அசைவேறுபாடு கருதி இவ்விலக்கணத்தை எடுத்தோதினார் என்க. |
எ-டு: ‘‘மங்கையைமெய்ப் பாதியிலே கொண்டான் பரமசிவன், கங்கையையும் சென்னிக் கரந்து’’ இப்பாவினுள் முதற்சீரை மாற்றெழுத்துத்தந்து இசைக்குங்கால் முறையே ‘‘மங்கயய்மெய்’’ என்றும் ‘‘கங்கயயும்’’ என்றும்வரும். வருங்கால் ஐகாரஉருபு மெய் என்பதனொடு இயையுங்கால் ஒன்றரை மாத்திரையாயும் உம் என்பதனொடு இயையுங்கால் ஒரு மாத்திரையாயும் நிற்றலைக் கண்டுகொள்க. |
‘‘தவளமாப் பூவுறை தையலின் கல்வி யவளைவாழ் கென்றல் அறிவு’’ அவளைவாழ் என்பது மாற்றெழுத்துப்பெற்று அவளய்வாழ் என நிற்பினும் அசை மாறுபடாது. ஒன்றரை மாத்திரையாகவே நிற்கும். அவளையேல் வீயா தறிவு எனவருமிடத்து அவளையேல் என்பது மாற்றெழுத்துப் பெறின் அவளயேல் என நிற்கும். ஆண்டு மூவசைச்சீர் ஈரசைச்சீராயும் ஐகாரம் ஒரு மாத்திரையாயும் நிற்கும். இந்நுட்பமெல்லாம் ஓர்ந்துணர்ந்து கொள்க என்பார் ‘‘தேருங்காலை’’ என்றும் ‘‘மொழிவயினான’’ என்றும் கூறினார் என்க. |