சூ. 58 :இகர யகரம் இறுதி விரவும்
(25)
 

க-து:

மொழி  இறுதிக்கண் இகரத்திற்கு மாற்றெழுத்தாக யகரம் வரும்
என்கின்றது.
 

பொருள்:  மொழிஇறுதிக்கண் இகரமும் யகரப்புள்ளியும் விரவிவரும்.
 

குறைச்சொற்கள்    உரிச்சொற்பகுதியாக    ஆக்கம்    பெறுமிடத்தும்
அம்முதனிலைச்சொற்கள் பெயரும்  வினையுமாக  ஆக்கம்  பெறுமிடத்தும்
துணைபுரிவன  இறுதி   இடைச்சொற்களாகும்.    அங்ஙனம்     பொருள்
வேறுபடுத்தும் இடைச்சொற்களுள் இகரமும் ஒன்றாம். ஈண்டுக்கூறிய அவை
சொல்லுறுப்பாகிப் பொருள் வேறுபடுத்தும் இகரம் என்பது  புலப்பட இறுதி
விரவும் என்றார்.
 

இகரஇடைச்சொல்;  மறவி,   பிறவி  எனத்தொழிற்பெயர்  விகுதியாயும்
காண்பி,  வருவி  எனப்    பிறவினை  விகுதியாயும்  அலரி,  புலரி  என
வினைமுதல் விகுதியாயும் ஊருணி எனச் செயப்படு பொருள்  விகுதியாயும்
மாட்சி, சூழ்ச்சி எனப் பண்புப் பொருள் விகுதியாயும் மண்வெட்டி, கோடரி
எனக்  கருவிப்பொருள்   விகுதியாயும்  கரி,  குரீஇ  எனப்பண்புணர்த்தும்
விகுதியாயும் வருதி, பெயர்தி  என  முன்னிலை  வினைவிகுதியாயும் ஆடி,
ஓடி என வினைஎச்ச விகுதியாயும் பிறவாயும் வரும்.
 

எ-டு:   நாஇ, ஆஇ (ஆ இ = பெற்றவள்)  என்பவை  நாய்,  ஆய்
எனவரும்.  கூஇ  -  கூய்  என  வினையாயும்   வரும்.  நா+இ=நாவினை
உடையது. தா + இ = தாயி-தாய் எனவரும்.
 

இவ்இகரம் சொல்லும்  கருத்தாவின்  சோர்வினான்  யகரப்  புள்ளியாய்
ஒலிக்கும். நாய், ஆய் என்பவை நாயி,  ஆயி  என்னும் சொற்கண் இகரம்,
யகரமாகத்  திரிந்தது  என்னாமல்  உடம்படுமெய்யாக வந்த  யகரம்  நிற்க
இகரம் குன்றியது எனக்  கொள்ளலாகாதோ  எனின்? ஆகாது.  நாஇ ஆஇ
கூஇ தாஇ என்னும்  சொற்களில்  வகரம்  உடம்படுமெய்யாக  வருதலன்றி
யகரம் வராதாம்.  கூய், தாய்  என  நிற்குமிடத்து வகர உடம்படுமெய்கெட
விகுதி இகரமே யகரமாக நிற்பது புலனாதலின் என்க.