சூ. 59 :பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்
(26)
 

க-து:

உயிரும்,  மெய்யும்  சார்புமாகிய எழுத்துக்கள் தனிமொழிக்கண்
முதற்   கண்ணும்  இறுதிக்கண்ணும்  நிற்கும்  முறைமைபற்றிக்
கூறத்தொடங்கி இச்சூத்திரத்தான் உயிர்எழுத்துப் பன்னிரண்டும்
மொழிமுதற்கண்வரும் என்று கூறுகின்றார்.
 

மூவகைமொழிகளுள்   ஓரெழுத்தொருமொழிகள்   தாமே   மொழியாகி
நிற்றலின் அவை, உயிரெழுத்தாயின் புணர்மொழியிடத்து  நிறுத்தசொல்லாக
வருங்கால் ஈறாகவும் குறித்து   வருகிளவியாக   வருங்கால்   முதலாகவும்
கொள்ளப்படும்.     உயிர்மெய்யெழுத்துக்கள்    ஓரெழுத்தொருமொழியாக
நிற்குமிடத்து மெய்ம் முதலாகவும்  உயிரீறாகவும் கொள்ளப்படும்.  இதனை,
‘உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே’ என்பதனான் அறியலாம்.
 

பொருள்:‘ஒளகார இறுவாய்’ எனப்பெற்ற உயிரெழுத்துப் பன்னிரண்டும்
மொழிக்கு முதலாக வருதற்காகும்.
 

எ-டு :  ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ,  ஒள  என  நெட்டெழுத்து  ஏழும்
(ஒள=சுருங்கு) தனித்துவந்தன. ஆவி, ஈகை,  ஊழி,  ஏணி,  ஐயை,  ஓசை,
ஒளவை என  ஈரெழுத்தொருமொழிக்கண்ணும்  ஆடவர்,  ஈதல்,  ஊடல்,
ஏற்றம், ஐயன், ஓங்கல், ஒளவியம் எனத் தொடர் மொழிக்கண்ணும் வந்தன.
 

‘‘குற்றெழுத்  தைந்தும் மொழிநிறை பிலவே’’ என்றதனான் சிறுபான்மை
அ, இ, உ  இம்மூன்றும் தனித்துச்சுட்டி வரும். அடை,  இலை, உடை, எரி,
ஒளி எனவும்  அரசன் - இரவலன் - உலகம்  -  எழில்  -  ஒற்றன்  என
ஏனைய  இருவகை மொழிகளுள் வரும். இவை  நால்வகைச்  சொற்களினும்
ஏற்ற பெற்றிவரும்.