|
சூ. 6 : | நீட்டம் வேண்டின் அவ்வள புடைய | | கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் | (6) | க - து : | எழுத்தோசை நீண்டு அளபெடையாமாறும், அதற்குக் காரணமும் கூறுகின்றது. |
பொருள்:விளிக்கவும், பா என்னும் ஓசை நிகழவும், அசை நிறைக்கவும், பிறவாறு எழுப்பவும், எழுத்துக்களின் ஓசையை நீட்டுதலை விரும்பின், அவ்வளவிற்கு அவ்வளபுடைய எழுத்து இசையைப் பிளவுபடாமற் கூட்டி எழுப்புக. கூட்டப்பெற்ற அவ்வளவினையுடைய எழுத்துக்கள் வரிவடிவின் கண்ணும் அடையாளமாக எழுதிக்கொள்ளப்பெறும். | எ-டு :ஆ அ ஈ இ ஊ உ ஏ எ ஐ இ ஓ ஒ ஒ ள உ எனவரும். புணர்ச்சிமயக்கத்து, உயிர்மெய்எழுத்து உயிரீறாகக்கொள்ளப்படுதலின், உயிர்மெய்யின்கண்ணும், சிறுபான்மை ஒற்றின் கண்ணும் ஆய்தத்தின் கண்ணும் கூட்டியெழுப்புதல் கொள்க. ‘எழூஉதல்’ என்பது வியங்கோளாக நின்றது. ‘உப்போஒ என உரைத்து மீள்வாள்’ எனவும், ‘நம்பீஇ! வருக’ எனவும், ‘நற்றாள் தொழாஅர் எனின்’ எனவும், ‘எடுப்பதூஉம் எல்லாம் மழை’ எனவும் ‘கண்ண் தண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்’ எனவும், ‘எஃஃகிலங்கிய கையராய்’ எனவும் வரும். | அவ்வளபுடைய எனப்பன்மைவாய்பாட்டாற் கூறினமையான் மூன்று மாத்திரையினும் மிக்கு நான்குமாத்திரையாக எழுப்புதலும் கொள்ளப்பெறுமென்க. | எ-டு:‘கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு’ எனவரும். இயற்றமிழுள் நான்கு மாத்திரையினும் மிகாதென அறிக. இசைத் தமிழின்கண் மிகும். அதனை இவ்வியலிறுதிக்கண்கூறுவார். |
|