|
சூ. 62 : | சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே | | அஐ ஒளஎனும் மூன்றலங் கடையே | (29) | க-து: | சகர மெய் ஒன்பது உயிரிசைகளொடு கூடி உயிர்மெய்யாய் வருமென்கிறது. | பொருள்:சகரமாகிய எழுத்தும் அ ஐ ஒள என்னும் மூன்றும் அல்லாத ஏனைய உயிரோசைகளுடன் மேலனவற்றைப் போல மொழி முதலாதற்குச் செல்லும். உம்மை எச்ச உம்மை. மூன்றும் என்னும் முற்றும்மை தொக்கது. கிளவி - கிளத்தலை உடையது என எழுத்தின் மேலாயிற்று. | எ-டு : சாரல், சின்னம், சீரை, சும்மை, சூழ்ச்சி, செல்வம், சேவல், சொன்றி, சோனை எனவரும். | வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்து செய்யுட்சொல்லாக வரும் வடசொற்களை இவ்வதிகாரப் புறனடையாற் கொள்க. எ-டு: சடை, சதுக்கம், சமன், சமழ்ப்பு, சகடம் எனவரும். |
சைனம்-சயினம், சையம், சௌரியம் எனச்சிதைந்து வரும் வடசொற்கள் இயைந்தன அன்மையின் கொள்ளப்பெறா என்க. |
|