சூ. 67 :குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்

ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் 

(34)
 

க-து:

குற்றியலுகரம்  மொழிக்கு  முதலாமாறும் அவ்வழி அதன் சார்பும்
பற்றுக் கோடும் அமையுமாறும் கூறுகின்றது.
 

பொருள்:  சார்பெழுத்து      மூன்றனுள்         குற்றியலுகரஎழுத்து
முறைப்பெயர்களுள் முன்னிலைப்பெயர் ஒன்றன் மருங்காகி,  ஒற்றாய்நிற்கும்
நகரப்புள்ளியின் மேல்உள்ள நகர மெய்யை  ஊர்ந்து  மொழிக்குமுதலாகும்.
எ-டு :நுந்தை.
 

மெய்யெழுத்துக்கள்   உயிரிசையோடு    கூடி    முதலாமாறு   போல
இச்சார்பெழுத்து உயிரியல்பாய் வந்து  மெய்யொடுகூடி  முதலாகும்  என்க.
துணையும் பற்றுக்கோடுமின்றிச்  சார்பெழுத்துக்கள்  தனித்தியங்காவாதலின்
‘‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்’’ என்றார்.
 

நுந்தை என்பதனுள் முதல் நகரம்  பற்றுக்கோடு;  இரண்டாவது  நகரம்
சார்பு. மொழியிறுதிக் குற்றியலுகரம்  வல்லொற்றுக்களைப்  பற்றுக்கோடாகக்
கொண்டு   வருதல்போல    மொழிமுதற்    குற்றியலுகரம்    நகரமாகிய
மெல்லெழுத்தினைப் பற்றுக்கோடாகக் கொண்டு வருமென்க.