சூ. 73 :ஏஓ எனும் உயிர் ஞகாரத் தில்லை
(40)
 

க-து:

ஏகார ஓகாரங்கள் மெய்யொடு கூடி ஈறாமாறு கூறுகின்றது.
 

பொருள்:  ஏகார ஓகாரங்கள்   என்னும்   உயிரெழுத்துக்கள்   ஞகர
மெய்யொடு கூடி ஈறாதல் இல்லை. ஏனைய மெய்களொடு கூடி ஈறாகும்.
 

பொருட்பேற்றால்   ஏனையமெய்களொடு    கூடி    ஈறாகும்    என
நின்றதெனினும்,     இவற்றிற்கும்    இனிவருவனவற்றிற்கும்  ஙகர  மெய்
ஒழியக்கொள்க. என்னை?  ஙகரம்  ஒருமொழியின்  முதலிலோ  ஈற்றிலோ
மொழியாக்கம்   பெற்று   வாராமையானும்,  குற்றியலிகரம்  குற்றியலுகரம்
இதனை ஊராமையானும் என்க.
 

“இஃது ஒருதலையன்மை’’ என்னும் உத்திக்கு இனம்.
 

எ - டு சே, தே, நே, பே, மே, வே எனவும் கோ, சோ, அந்தோ, நோ,
போ, மோ, தெய்யோ, அரோ எனவும் வரும்.  ஏனைய  வந்தவழிக்காண்க.
இவற்றிற்கு ஈற்றசை  முதலாய  இடைச்சொற்கள்  புணர்ந்த  மொழிகளைக்
காட்டுதல் இந்நூல் நெறிக்கு ஒவ்வாதென்க.