சூ. 76 :உப்ப காரம் ஒன்றென மொழிப

இருவயின் நிலையும் பொருட்டா கும்மே 
(43)
 

க-து: 

பகரத்தை   ஊர்ந்து  முற்றியலுகரமாக   வரும்  சொல்  ஒன்றே
என்றும்,     அதுபெயராயும்      வினையாயும்   வருமென்றும்
கூறுகின்றது.
 

பொருள்:பகரமெய்யை ஊர்ந்துவரும் முற்றுகரச்சொல் ஒன்றே.  அஃது
தொழிற்பெயர்,   ஏவல்வினை    ஆகிய     இரண்டிடத்தும்     நிற்கும்
பொருண்மையுடையதாகும் எனக் கூறுவர் புலவர்.
 

எ - டு:  தபு - நீதபு! எனவரும். த =கெடுவாயாக!  பெயராயின்  தவறு
என்பது பொருளாம். அது இக்காலத்துத் ‘தப்பு’ என வழங்கும்.
 

‘இருவயின் நிலையும்  பொருட்டாகும்’  என்பதற்கு உரையாசிரியன்மார்
தன்வினையும் பிறவினையும் என  இருபொருட்டாகும் என்பர். அப்பொருள்
எடுத்தல்,  படுத்தல்   என்னும்   ஓசைக்குறிப்பாற்   பெறப்படுவனவன்றிச்
சொல்லாற்றலாற் பெறப்படுவனவல்ல. அங்ஙனம் குறிப்பாற்பொருள் தருவன
கழி, வெளு முதலாகப் பல உளவாதலின் அவர் உரை பொருந்தாமையறிக.
 

சகரபகரங்களை  விதந்து  கூறினமையின்  ஏனையவை  பலவாக வரும்
என்க.
 

எ - டு:  நகு,  புகு, வகு, அது,  இது, உது, அறு,  இறு, பொறு, அடு,
விடு, கொடு, நடு எனவரும்.