எ - டு: தக, பச, தட, அண, புத, தப, கம, துய, துர, கல, தவ, மழ, உள, பிற, அன்ன என அகரம் வரும். நகரம் - நக்கீரன் நப்பசலை என்றாற்போல இடைச்சொல்லாய் அகரத்தொடு வரும். ஞகரத்தொடு அகரம் வந்துழிக்காண்க. கா, சா, தடா, நுணா, தா, நா, பா, மா, யா, அரா, உலா, உவா, விழா, தளா, புறா, கனா என ஆகாரம் வரும். ஞகரத்தொடு வருவழிக் கண்டுகொள்க. ஆகி, பாசி, கடி, அணி, மதி, இப்பி, உமி, நாயி, கரி, கலி, புவி, கழி, மறி, நனி என இகரம் வரும். ஞகர நகரத்தொடு வந்துழிக்காண்க. சீ, உடீ, தீ, நீ, பீ, மீ, குரீ, வீ என ஈகாரம் வரும். ஏனையவற்றொடு வந்துழிக்காண்க. கை, அசை, விதை, மஞ்ஞை, உடை, கணை, தை, நை, பை, மை, ஐயை, சுரை, மலை, வை, மழை, மிளை, இறை, சுனை என ஐகாரம் வரும். இவற்றுள் எடுத்துக்காட்டு இல்லாதன மொழியாக்கம் பெறவில்லை என்பதன்றி வாராமைக்கு ஏதுவின்மையான் வந்துழிக்காண்க என்று கூறப்பட்டது. |