சூ. 82 :மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த

னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப

புகரறக் கிளந்த அஃறிணை மேன
(49)
 

க-து:

ஒரோ  காரணங்களைக்  கருதிச்  சில  சொற்களை  வரையறுத்த
அதிகாரத்தான்  னகர  ஒற்று  ஈறாகும் சொற்கள்  இவ்வாற்றான்
இத்துணை என வரையறை கூறுகின்றது.
 

இதன்பயன், மகர னகரங்கள்  ஒன்றற்கொன்று  மாற்றெழுத்தாக  வரும்
என்பதும், னகரஈற்று அஃறிணைச் சொற்களுள்  சில  மாற்றெழுத்துப்பெற்று வாரா என்பதும் உணர்த்துதலாம்.
 

பொருள்:னகரப்புள்ளியை    ஈறாக     உடைய     (ஈரெழுத்தொரு
மொழியல்லாத) தொடர் மொழிகளுள்,  மகர  ஈற்றுத்தொடர்  மொழிகளாக மயங்குதலினின்று  வரையறுக்கப்பெற்றவை,  அஃறிணைப்   பொருள்மேல் குற்றமறக்கிளக்கப்பெற்ற ஒன்பது சொற்கள் எனக் கூறுவர் புலவர்.
 

எ - டு :  எகின், செகின்,  விழன்,  பயின்,  குயின்,  அழன்,  புழன்,
கடான்,  வயான்  எனவரும்.  இவை    நச்சினார்க்கினியர்   காட்டியவை.
இச்சூத்திரத்து ஒன்பது என்னும் வரையறை   தெளிவுபடுமாறில்லை.  கடன்,
கவின்  என்றாற்   போல்வனவும்      மகரமாக    மயங்குதலின்மையின்
இச்சூத்திரத்தின்  பாடம் பிறழ்ந்திருக்கலாமெனக் கருதவேண்டியுள்ளது.
 

மொழிமரபு முற்றியது.