3. பிறப்பியல்
 

மேல்இரண்டியல்களுள்   கூறப்பெற்ற   எழுத்துக்களின்   பிறப்பமைதி
கூறுதலின்  இது   பிறப்பியல்   எனப்   பெயர்   பெற்றது.   பிறப்பாவது
கருக்கொண்டு உருப்பெற்று வடிவமைந்து வெளிப்படும் நிலையாகும்.
 

எழுத்துக்களை   வரையறை  செய்து கொண்ட பின்னரே அவைபற்றிய
பிறப்பியல்களைக் கூறுதல் முறைமையாகலின் நூன்மரபிலும் மொழிமரபிலும்
அவற்றின்   தொகைகளையும்,   இயக்கங்களையும்,   வரையறை   செய்து,
அவற்றின் பின்னரும், சொற்கள் நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியாயும்
தொடருங்கால்  அவற்றின்  ஈற்றிலும்   முதலிலும்  நிற்கும்  எழுத்துக்கள்
ஓரியல்பும்   மூன்று   திரிபும்    கொள்ளும்    இயல்பினை   அவற்றின்
பிறப்பமைதிகாட்டி  உணர்த்தல் வேண்டுதலின் புணரியலுக்கு  முன்னருமாக
இப்பிறப்பியலை ஆசிரியர் ஓதுகின்றார்.
 

இங்ஙனம்   எழுத்துக்களின்  பிறப்பியல்புகளைக்  கூறுதலான்  எய்தும்
பயனாவது:   எழுத்துக்கள்   வளியிசையான்    உந்தப்பெற்று   உருவுற்று
வன்மையும்  மென்மையும்   இடைமையுமாக   ஓசையுற்று   ஒலிக்குமாறும்,
அவற்றின்   வடிவங்கள்   அமையுமாறும்   அவை   ஒன்றொடு   ஒன்று
இடையீடின்றித்   தொடருங்கால்   அவை   இயல்பும் திரிபும் எய்துமாறும்
பிறவும்  தெற்றெனப்  புலப்பட்டு  மேற்கூறப்பெறும்  புணர்ச்சி  விதிகட்கு
அறிவியற் காரணம் இவை என உணர்ந்து கோடலாம்.
 

சூ. 83 :உந்தி முதலா முந்துவளி தோன்றித்

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

உறுப்புற் றமைய நெறிப்பட நாடி

எல்லா எழுத்தும் சொல்லுங் காலை

பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல

திறப்படத் தெரியும் காட்சி யான 
(1)
 

க-து:

பொதுப்பட    எழுத்துக்களெல்லாம்   தோன்றுமாறும்,   அவை
உருவாகிப் பிறக்குமாறும் கூறுமுகத்தான் அவற்றைப் பிறப்பிக்கும்
நிலைக்களனும் வினைக்களனும் இவை எனக் கூறுகின்றது.
 

பொருள்:எல்லா  எழுத்தும் = மொழிக்கு உறுப்பாக  நிகழும்  எல்லா
எழுத்துக்களும், உந்திமுதலா முந்து வளிதோன்றித் தலையினும் மிடற்றினும்
நெஞ்சினும்  நிலைஇ=கொப்பூழினிடமாகத்  தோன்றி  மேலெழும் (உதானன்
என்னும்)   ஓசைக்காற்று,  தலையும்  மிடறும்,   நெஞ்சுமாகிய   மூவகைக்
களத்தும்நிலை  பெற்று,  பல்லும்  இதழும்  நாவும்  மூக்கும்  அண்ணமும்
உளப்பட எண்முறைநிலையான் உறுப்புற்றமைய =  பல்லும் இதழும்  நாவும்
மூக்கும்  அண்ணமுமாகிய ஐவகை வினைக்களங்கள்  உட்பட அவ்  எட்டு
வகையாகிய    தன்மையுடைய   உறுப்புக்களைப்   பொருந்தியமைதலான்,
நெறிப்பட  நாடிச்சொல்லுங்காலை = அவற்றை   அவற்றின் இயல்புதோன்ற
நோக்கி ஒருவன்   சொல்லுமிடத்து,  வேறு  வேறியல பிறப்பின்ஆக்கம் =
வேறுவேறு இலக்கணத்தையுடைய  பிறப்பினான் ஆகும் அவற்றின் உருவும்
வடிவும்,   காட்சியான்   திறப்படத்    தெரியும்   =   காட்சியளவையான்
செம்மையாகப் புலப்படும்.
 

எல்லா எழுத்தும் உறுப்புற்றமையை நாடிச்  சொல்லுங்காலை  பிறப்பின்
ஆக்கம் காட்சியான் திறம்படத்  தெரியும் எனக்கூட்டி  வினைமுடிபு செய்க.
வளி=ஓசைக்காற்று.  ஆக்கம்  (காரியமாகிய)  உருவும்  வடிவும்.  காட்சி  =
மெய்யுணர்வான்   எய்தும்   தோற்றம்.    நிலைக்களனும்     ஓராற்றான்
உறுப்பாகலின்   வினைக்களங்களொடு   கூட்டி  ‘‘எண்முறை   நிலையான்
உறுப்பு’’  என்றார். ‘அமைய’ என்னும் செயவெனச்சம் காரணப்பொருட்டாய்
நின்றது.
 

இனி,   முந்துவளியானது  நெஞ்சு,  மிடறு,  தலை   எனச்   செல்லும்
முறைப்படி      கூறாமல்     தலை,     மிடறு,    நெஞ்சு   எனமுறை
மாற்றிக்கூறியமைக்கும்,  மூக்கு, அண்ணம்,  நா,  பல்,  இதழ்,  மிடறு என வழிமுறைப்படிக்கூறாமைக்குங்     காரணம்    என்னையெனின்?   உயிர்
எழுத்துக்களும்  மெய்யெழுத்துக்களும் எண்வகைக்களங்களிலும்  அமைந்து
வேறுவேறு இயலவாய் உருப்பெற்ற  வழி அவை  ‘‘மெய்யொ  டியையினும்
உயிரியல் திரியாது’’ ‘‘புள்ளி யில்லா எல்லா மெய்யும் ...  உயிர்த்த லாறே’’
‘‘மெய்யின்  வழியதுஉயிர்   தோன்று   நிலையே’’  என்னும்  விதிகளான்
உயிரைத்  துணையாகக்  கொண்டு  உயிர்மெய்  எழுத்துக்கள்  ஈரொலியும்
ஓரிசையுமாக    ஒற்றுமையும்,   வேற்றுமையும்  தோன்றப்  பிறத்தலானும்,
மெய்யெழுத்துக்கள்   புள்ளியாய்   ஒலித்தற்கு  அவை  சார்ந்து   நிற்கும்
உயிர்எழுத்தின் இசை  நீளவேண்டுதலானும், முந்து  வளியானது  விரைந்து
சுழலும்     உறழ்ச்சியான்     எழுத்துக்கள்     பிறக்கும்     என்பதைப்
புலப்படுத்தற்கென்க.   அதனானன்றே  ‘‘உறுப்புற் றமைய நெறிப்பட நாடிச்
சொல்லுங் காலை’’ எனச் சொல்லும் முறைமையை விதந்தோதினார் என்க.
 

இனிப்,  பேச்சொலியை    எழுப்புதற்    பொருட்டுப்    புறக்காற்றை
உள்ளிழுக்குங்கால் அக்காற்று வயிற்றின் அடிவரையும்  சென்று  நாதமாகிய
தத்துவத்தோடு கூடி மேல் எழுதலின் உந்தி முதலா முந்துவளி என அதன்
தத்துவ இயல்பு தோன்றக் கூறினார் என்க.  உடலியக்கத்துக்குக் காரணமாக
உள்ள  பத்துவகைக்  காற்றினுள்  ஓசையை  எழுப்புங்காற்றிற்கு  உதானன்
என்பது பெயர்.  உணர்வின்  வெளிப்பாடே  மொழியாதலின்  உணர்வைத்
தூண்டும் இடம் தலை  (மூளை)   யாதலின் அது  எழுத்துப்  பிறப்பதற்கு
மூலமாக அமைந்தது.
 

மொழிநூலார், தலை என்றது நுதலின் கீழ் உள்ள அகப்பகுதி  என்றும்,
அஃது மிடற்றுக்கும் மேற்பகுதியாகலின் தலை எனப்பட்டது  என்றும், அது
மூக்கறையைக் குறிக்கும் என்றும் கூறுவர்.
 

மூக்கு என்றது மெல்லின  எழுத்துக்களைப்  பிறப்பிக்கும்  உறுப்புக்கள்
மெய்யுற ஒற்றியகாலை அவ்வுறுப்புக்களின் அடைப்பை  நீக்கி வெளிப்படும்
வளியிசை    புறப்படும்  இடத்தை.  அஃது  குரல்வளையின்  மேல்நிற்கும்
மூக்கின் அடிப்பகுதியாகிய  துளைவழியாகும்.  அக்காரணத்தால் மூக்கினை
வளிநிலைக்   களனாகக்   கூறாமல்   வினைக்களமாகக்  கூறினார் என்க.
அதனான் வினைக்களனே நிலைக்களனும் ஆயிற்றென்க.
 

எண்வகைஉறுப்பினுள் நெஞ்சும் மிடறும் தலையும் அதிர்வு உறுப்புக்கள்.
மூக்கும்   அண்ணமும்     பல்லும்   நிலையுறுப்புக்கள்.  நாவும் இதழும் இயங்குறுப்புக்கள்   ஆகும்.  முந்துவளியான்  தோன்றும்  (நாதம்)  ஓசை
ஒன்றேயாயினும் நெஞ்சுவளியின்     அடர்த்தியானும்,    மிடற்றுவளியின்
துரப்பினானும்,    மூக்குவளியின்    செறிவினானும்,  இயங்குறுப்புக்களின்
இயக்கத்தானும்   அவ்வோசை  வெவ்வேறெழுத்தொலிகளாய்த்  திறப்படத்
தெரிவன  ஆயின என்க. இயங்குறுப்புக்களின் அமைப்பினான் வரிவடிவம்
செய்துகொள்ளும்  நெறியை உய்த்துணரவைத்தார் தொன்னூலார். என்னை?
வரிவடிவம்   காலந்தொறும்  எழுதுகருவி,  எழுதப்படும் கருவிகட்கு ஏற்ப
மாறுபடுதலின்.
 

உலகமொழி  எழுத்துக்கள்  யாவற்றிற்கும்   பொருந்த   எழுத்தொலிக்
கோட்பாடுகளை   விளக்கும்   இச்சூத்திரத்தின்  நுட்பங்களை   விரிக்கின்
பெருகுமாகலின் மாணாக்கர் ஆய்ந்துணர்க.