உயிரெழுத்துள் முதலிரண்டற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
பொருள்:மேற்கூறிய உயிர் பன்னிரண்டனுள் அகரம் ஆகாரமாகிய இரண்டும் அண்ணத்தின் செயலாகிய அங்காத்தல் முயற்சியான் வெளிப்பட்டு இயலும். அங்காத்தல்=அண்ணாத்தல்.
இரண்டும் என்னும் உம்மை தொக்கது. முயற்சி ஒன்றாகக் கூறப்படினும் அவைதம்முள் இசை வேறுபாடுடைய என்பதறிவித்தற்கு ஆயிரண்டு என விளங்கக் கூறினார். மேல் வரும் அப்பாலைந்தும் என்பதற்கும் இவ்விளக்கம் ஒக்கும். ‘‘அங்காப்ப’’ என்னும் செயவெனச்சந் திரிந்து நின்றது.