அகரஆகாரம் போலாது அங்காத்தல் முயற்சி ஓரளவே உடைமையின் அவற்று ‘‘ஓரன்ன’’ என்றார். நாவிளிம்பால் அணுகப்படும்பல் அண்பல் எனப்பட்டது. இசைத்தல்=சொல்லப்படுதல். அவைதாம், எனப்பிரித்துக் கூறியதன் கருத்து, அடுத்துவரும் எழுத்துக்கட்கும் அங்காப்பு முயற்சி உண்டு என உணர்த்துதற்காம். இயலும் என்றது மேற்சூத்திரத்தினின்று கூட்டிக் கொள்ளப்பட்டது. இது பிறப்பியலாதலின் நெடுங்கணக்கு முறையானன்றிப் பிறப்பிக்கும் உறுப்பு அடிப்படையில் எழுத்துக்களை நிரல்படுத்து இலக்கணம் கூறுகின்றார். |