|
சூ. 88 : | தத்தம் திரிபே சிறிய என்ப | (6) | க-து: | உயிர்எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பிற்குப்புறனடை கூறுகின்றது. | பொருள்: மேல் சிலவும் பலவுமாக ஒருங்கு வைத்து உயிரெழுத்துக்கட்கு வினைக்கள முயற்சி கூறப்பட்டிருப்பினும் ஒவ்வொன்றும் தம்முள் சிறிது வேறுபாடுடையவாம். | குறிலும் நெடிலும் ஒன்றிலிருந்து ஒன்று நீடலும் குறுகலுமின்றித் தனித்தனியே பிறத்தலான் அவற்றின் திரிபு உணரப்படும். இகர ஈகாரங்கள் அண்பல்லை நாவிளிம்பு நன்கு பொருந்தவும், எகர ஏகாரங்கள் ஓரளவு பொருந்தவும், ஐகாரம் அணுகிப் பொருந்தவும் பிறத்தலை இசைத்துக் கண்டுகொள்க. அவ்வாறே உகர ஊகாரங்களின் முயற்சியும் ஒகரஓகாரங்களின் முயற்சியும் ஒளகாரத்தின் முயற்சியும் வேறுபடுதலை இசைத்துக் கண்டு கொள்க. | இப்புறனடையை இனிவரும் மெய்யெழுத்து, சார்பெழுத்துக்களின் பிறப்பு விதிகளுள் இணைத்துக் கூறப்பெறும் எழுத்துக்கட்கும் கொள்க. இச்சூத்திரம் அரிமாநோக்காக நின்றது. |
இன்னும் இதனானே ஒவ்வோரெழுத்தையும் கூறுமிடத்து எடுத்தல், படுத்தல், நலிதல், உறழ்தல் என்னும் கருத்தாவின் முயற்சியான் வேறுபடுதலையும் கண்டு கொள்க. |
|