சூ. 9 :

னகர இறுவாய்ப் 

பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப 

(9)
 

க - து:
 

தனித்துவரல்   மரபினவாய   முப்பஃதுள்  உயிர்  எழுத்துக்கள்
தவிர்ந்த   ஏனையவற்றிற்குரிய  தொகையும்,   பொதுக்குறியீடும்
கூறுகின்றது.
 

பொருள்:ககரமுதல் னகர இறுவாயாக  உள்ள எழுத்துப்  பதினெட்டும்
மெய்யென்னும்  பெயர்  பெறும் எனக் கூறுவர் புலவர். “அகர முதல் னகர
இறுவாய்”    (சூ-1)  என்புழிச்சார்ந்துவரல்  மரபினையுடைய   மூன்றற்கும்
இடங்கூறாமையின்   அவை   இடையே   நிற்குங்கொல்   என்னும் ஐயம்
நீங்கவும்   அவை  மெய்யெழுத்துக்களின் பின்னாக எண்ணப்படுதல் முறை
என்பது    தோன்றவும்   ‘‘னகர இறுவாய்’’   என்று   கூறிக் ககரமுதல்
என்பதை   உய்த்துணர   வைத்தார்.
 

சார்பெழுத்துக்கள்  மெய்யெழுத்துக்களின்  பின்னாக  வைக்கப்படுதலை
இனி   மேற்கூறுகின்ற   முறைமையானும்,   குற்றியலுகரப்   புணரியலைப்
புள்ளிமயங்கியலின்   பின்வைத்த   முறைமையானும்,   தெரிந்து  கொள்க.
‘‘மெய்’’   என்றது  நா முதலிய பிறப்புறுப்புக்களான் அமையும் வடிவினை.
இவை   உயிர்போலத்   தனித்திசைக்கும்   இயல்பில்லாதனவாய்   உயிர்
மேவுதற்குரியவாய்   உள்ளமையின்,  மெய் என்னும் பெயர் பெற்றன. மெய்
எழுத்துக்கள்   உயிரைச்  சார்ந்து ஒலித்தலும் உயிரைமேவி இசைத்தலும் -
வடிவுதிரிதலும்,   மயங்குதலுமாகிய   பல   தன்மைகளை   உடைமையின்
உயிரெழுத்துக்கு  ஓதியாங்கு அதன் தன்மைகளை உடன்ஓதாராயினார்.