சூ. 92 : | அவ்வா றெழுத்தும் மூவகைப் பிறப்பின |
(10) |
க-து: | இரண்டுமுதலாக இணைத்துக் கூறப்பெறும் எழுத்துக்கள் முயற்சியான் சிறிதுவேறுபடுமென மேல்புறனடை (சூ. 6) கூறினமையின் ஈண்டுக் கங-சஞ-டண என இணைத்துக் கூறியவற்றுள்ளும் அவ்வேறுபாடு உண்டெனக் கருதற்க. அவை வளியிசையின் வேறுபட்டு இரண்டாக நின்றனவன்றிப் பிறப்பிட முயற்சியான் ஒரு தன்மையவே எனப் புறனடை கூறுகின்றது. ஐயமகற்றுதல் எனினும் ஒக்கும். |
பொருள்: மேல்இரண்டிரண்டாகச் சேர்த்துக் கூறப்பெற்ற மூவிரண்டு எழுத்துக்களும், வினைக்கள முயற்சியான் திரிபுடையவை யல்ல; மேற்கூறியாங்கு மூவகைப்பிறப்பினவேயாம். தேற்றேகாரம் தொக்கது. |
வந்ததுகொண்டு வாராததுணர்த்தல் என்னும் உத்தியான், வல்லெழுத்துக்கட்கு நெஞ்சுவளியிசை உரியதென்று கொள்க. என்னை? வளியிசைமூன்றனுள் உயிரெழுத்துக்கள் ‘‘மிடற்றுப் பிறந்த வளியினி சைக்கும்’’ என்றும் மெல்லெழுத்துக்கள் “மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்’’ என்றும் கூறியுள்ளமையானும் இடையெழுத்துக்களுள் யகரம் மிடற்றெழுவளியிசையால் தோன்றும் எனப்புலப்படுத்தி ஏனைய இடையெழுத்துக்களுக்கும் அதுவே என உய்த்துணரவைத்தமையானும், எஞ்சிய நெஞ்சு வளி வல்லெழுத்திற் குரியது என்பது பெறப்படும். |
வல்லெழுத்துக்கட்கும் மிடற்றுவளியிசையையே கொள்ளலாகாதோ எனின்? ஆகாது. என்னையெனின்? உயிரெழுத்துக்களையும், இடையெழுத்துக்களையும் போலாமல் நெஞ்சினிடமாக அடர்ந்தெழும் காற்றான் உந்தப்பெற்று வெளிப்படுதலின் மிடற்றுவளியின் வேறாகக் கொள்ளப்படுமென்க. |
ஈண்டுக் கூறப்படும் எழுத்துப் பிறப்புவிதிகள், பின்னர்க் கூறப்படும் சொற்புணர்ச்சிக்கண் எய்தும் இயல்பும் திரிபுமாகிய வேறுபாடுகளை உணர்த்தற்குரிய அளவே சுருங்க ஓதப்பட்டுள்ளன. ஆசிரியர் பிறப்பியலின் ஏனைய நுட்பமெல்லாம் கூறினாரல்லர் என அறிக. |