சூ. 93 :

அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்

நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத்

தாம்இனிது பிறக்கும் தகார நகாரம்

(11)
 

க-து: 

மெய்யெழுத்துள்   தகர   நகரங்கட்கு   வினைக்கள   முயற்சி
கூறுகின்றது.
 

பொருள்:தகரமும்    நகரமுமாகிய     மெய்யெழுத்துக்கள்    தாம்,
அண்ணத்தைப்   பொருந்தியிருக்கும்     பற்களின்      அடிப்பகுதியின்
இருபக்கங்களிலும்  நாவினது   முற்பகுதி  விரிந்து  தனது  வடிவு  நன்கு
பொருந்தத் தகரமும்,  நாநுனி  விரிந்து  ஒற்ற  நகரமும்  தத்தம்  இயல்பு
தோன்ற இனிது பிறக்கும்.
 

மேற்பல்லின்  அடிப்பகுதியில்   நாவிரிந்து  நன்கு   பொருந்தாவிடின்
உள்வளி  சிறிதே  வெளிப்படும்.  அவ்வழி  இவை  இடைமைத்  தன்மை
எய்துதற்கு ஏதுவாகுமாதலின்  ‘‘பல்முதல்  மருங்கின்’’  என்றும்,  ‘‘நாநுனி பரந்து’’ என்றும், ‘மெய்யுற’ என்றும், ‘ஒற்ற’ என்றும்  விளங்கக் கூறினார்.
 

ஒவ்வொரு    உறுப்பின்    வடிவமும்   அதனதன்   நிலையில்  இவ்
எழுத்துக்கட்கு உடம்பாகலின் வடிவுகொள்ளும் நிலையை ‘‘மெய்’’ என்றார்.
மெய்உற்றும், நன்கு ஒற்றியும் நின்ற வழி  அவ்எழுத்தின்  தன்மை  நன்கு
புலனாதலின் ‘‘இனிது பிறக்கும்’’ என்றார்.
 

நன்கு உறுதலும் ஒற்றலும் நெகிழ்ந்த  வழி  இனிது  பிறவா  தென்பது.
தகரநகரங்களின் முயற்சித்திரிபு மிக நுண்ணியதாதலை உணர்க.