மெய்களுள் றகரனகரங்களுக்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. அண்ணமும் நாவுமாகிய உறுப்புக்களின் அடிப்படையிற் பிறப்புவிதி கூறத் தொடங்கியமையின் நெடுங்கணக்குமுறை நோக்காது உறுப்பமைதி நோக்கித் தகரனகரங்களின் பின்னர் றகரனகரங்களின் முயற்சி கூறுகின்றார் எனஅறிக.
பொருள்:றகரம் னகரம் ஆகிய இரண்டு மெய்யெழுத்துக்களும் நாவின் நுனி (சிறிது வளைந்து) மேனோக்கி எழுந்து அசைந்து விரிந்து அண்ணத்தை நன்கு தொட்டு நிற்கப் பிறக்கும்.
அணருதல்=மேல்நோக்கி அசைந்து விரிதல் (அண்ணத்தை நோக்கிச் செல்லுதல் அணர்தலாயிற்று) மேல்நோக்கி எழுதல் இரண்டற்கும், அசைதல் றகரத்திற்கும் ஏற்புழிக் கோடல் என்னும் உத்தியாற் கொள்க.