சூ. 135 :

அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே

அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே

(43)

க - து :

அல்லகுறிப்படுதலும்  அதற்கு  ஏதுவும்  ஆமாறு கூறுகின்றது.
அது       தலைவிக்கோதிய கிளவிகளுள்       "இருவகைக்
குறிப்பிழைப்பாகிய விடத்தும்" என ஓதப்பட்டதாகும்.
 

பொருள் :தான்   குறியிடத்திற்கு   வந்து  சேர்ந்தமையைத் தலைவன்
புலப்படுத்தும்   அடையாளச்   செய்கைகள்     ஒரோவழித் தலைவனான்
நிகழாமல்  இயற்கையாக நிகழ, அதன் உண்மையறியாமல் தலைவன் செய்த
குறியாக   எண்ணி   மயங்கிய   அமைதியான்   வரின்   தலைவியிடத்து
அல்லகுறிப்படுதலும்   உரியதாகும்.      அல்லகுறி =    குறியல்லாதகுறி.
படுதல்=வருந்துதல்.
 

எ - டு :

இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக்

கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல்

எம்மினும் உயவுதி செந்தலை யன்றில்

கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ

நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே
 

(நச்-மேற்)
 

இது தலைவன் குறிபொய்த்தான் என மயங்கியது.
 

இடுமணல் எக்கர் அகன்கானற் சேர்ப்பன்

      

கடுமான் மணியரவம் என்று - கொடுங்குழை

புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தான் சிறுகுடியர்

உள்ளரவம் நாணுவர் என்று

(ஐந்-எழு-54)
 

எனவரும். இஃது அல்லகுறி உற்றுமயங்கியது.