சூ. 149 :அவனறிவு ஆற்ற அறியு மாகலின்
ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும்
      

உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற்

பெருமையின் திரியா அன்பின் கண்ணும்

கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின்

அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்

இன்பமும் இடும்பையும் ஆகிய விடத்தும்

கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி

நயந்த கிழவனை நெஞ்சுபுண் ணுறீஇ

நளியின் நீங்கிய இளிவரு நிலையும்

புகன்ற உள்ளமொடு புதுவோர்ச் சாயற்கு

அகன்ற கிழவனை புலம்புநனி காட்டி

இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த் தருக்கி

எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்.

தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி

எங்கையர்க் குரையென இரத்தற் கண்ணும்

செல்லாக் காலைக் செல்கென விடுத்தலும்

காமக் கிழத்தி தன்மகத் தழீஇ

ஏமுறு விளையாட் டிறுதிக் கண்ணும்

சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி

அறம்புரி நெஞ்சமொடு தன்வர வறியாமை

புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும்

தந்தையர் ஒப்பர் மக்களென் றதனான்

அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்

கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது

நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப்

பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும்

கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி

அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்

காதல் எங்கையர் காணின் நன்றென

மாதர் சான்ற வகையின் கண்ணும்

தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை

மாயப் பரத்தை உள்ளிய வழியும்

தன்வயிற் சிறப்பினும் அவன்வயிற் பிரிப்பினும்

இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும்

காமக் கிழத்தியர் நலம் பாராட்டிய

தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்
கொடுமை ஒழுக்கத்துத் தோழிக் குரியவை
வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக்
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைக்
கிழவோள் செப்பல் கிழவ தென்ப.
(6)
 
க - து :கற்பொழுக்கத்துத் தலைவி   கூற்று   நிகழும்   இடமாமாறு
கூறுகின்றது.
 

பொருள் : அவனறிவு ஆற்ற அறியுமாகலின் ஏற்றற் கண்ணும் என்பது =ஒத்ததறிந்தொழுகும்  தலைவனது   அறிவுணர்வைத்   தலைவி    நிரம்ப
அறிவாளாதலின் அவன் வேட்கையின் ஏற்று நடக்குமிடத்துத் தலைவிகூற்று
நிகழ்தல் கற்பிற்குரியதெனக் கூறுவர் புலவர் என்றவாறு.
 

‘தலைவி   கூற்று   நிகழ்த்தல்   கற்பிற்குரியது எனக் கூறுவர் புலவர்’
என்பதனை இனி வருவனவற்றொடும் கூட்டிக்கொள்க.
 

எ - டு :

நெடிய திரண்ட தோள்வளை நெகிழ்த்த

கொடிய னாகிய குன்றுகெழு நாடன்

வருவதோர் காலை இன்முகம் திரியாது

கடவுட் கற்பின் அவன்எதிர் பேணி

மடவை மன்ற நீயெனக் கடவுபு

துனியல் வாழி தோழி சான்றோர்

புகழும் முன்னர் நாணுப்

பழியாங் கொல்பவோ காணுங் காலே

(குறு-252)
 

2) நிறுத்தற் கண்ணும் என்பது = அவனது பரத்தைமையைக் கருதியவழி
ஊடியும் புலந்தும் நீக்கி நிறுத்துமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

கைவளை நெகிழ்தலும் மெய்பசப் பூர்தலும்

மைபடு சிலம்பில் ஐவனம் வித்தி

அருவியின் விளைக்கும் நாடனொடு

மருவேன் தோழிஅது காமமோ பெரிதே

(குறு-371)
 

தலைவனை நீக்கி நிறுத்தியமை தோழியிடத்துக் கூறியது.
  

3) உரிமை   கொடுத்த   கிழவோன்   பாங்கிற்  பெருமையின் திரியா
அன்பின்  கண்ணும்  என்பது = இல்லக்கிழத்தியருள்  மனையறம்  பேணிக்
குடிபுறந்தரூஉம்  உரிமையைத்  தனக்களித்த   கிழவோன்பால்  ‘இவள்என்
மனைக்கிழத்தி’  என்றொழுகும்  பெருமையினின்றும்  திரிவுறாத  அவனது
அன்பினைக் கருதுமிடத்தும் என்றவாறு.
 

என்றது : நாடாளும் பொறுப்பினராகிய அரசர்  பகைவரைப் பிரித்தலும்,
பிரிந்தாரைப் புணர்த்தலும் ஆகிய  அரசியல்   சூழ்ச்சி   கருதி ஒருவரின்
மேற்பட்ட மனைவியரைக் கொள்ள   நேர்தலின்   அவருள்   தன்னொடு
அரியணையில் அமரும்   உரிமையும்   அறனும்  கொடையும்   இயற்றும்
உரிமையும் ஒருத்திக்கே தருதல் மரபாகலின் அம்மரபானே தனக்கு உரிமை
தந்து திரியாது    அதனைப்    பேணும்    தலைவனது    பேரன்பினை
எண்ணுந்தொறும் என்றவாறு.
 

இம்மரபு வேந்தர்க்கும் குறுநில மன்னர்க்கும்  பெருங்குடி வணிகர்க்கும்
உரித்தாகலின் விதந்து கூறப்பட்டது.  நச்சினார்க்கினியர்   இக்குடிமரபினை
வரலாற்று வழி அறிந்திருந்தும்,  அதனைத் தவிர்த்து   இஃது ஆரிய வேத
வழக்கினைக் கருதியது எனத்தன் கொள்கைக்கு   ஏற்ப  வலிந்துரை கூறிச்
சென்றார்.     அதனான்   திரியா   அன்பென்றது   தலைவியது  அன்பு
எனப்பொருள் கூறிச்சென்றார்.
 

தலைவி அன்பு திரியின் அஃது   அகனைந்திணை    ஆகாமையொடு
கற்புடைமைக்கும்  இழுக்காமாதலின்   அவர்   கருத்து   ஒவ்வாமையறிக.
ஊடலின்கண் அன்பிலாள் போலப் புலந்து  உரைத்தலல்லது எஞ்ஞான்றும்
அன்புமாறாள்   தலைவி   என   அறிக.   ‘மைபடு  சென்னி’   என்னும்
மருதக்கலிப்பாட்டுள் வரும் தலைவன் அரசனாதலை அறிக.
 

இம்மூன்று கிளவிகளையும் ஒரு  கிளவியாகக்  கொண்டு உரை கூறுவார்
நச்சர். மூன்றாகக் கொள்ளுதலே ஏற்புடையது என்க.
 

4) கிழவனை   மகடூஉப்   புலம்பு   பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் என்பது = தலைவனைப் பிரிந்து தலைவி தனிமையுறுதல்
பெரிதாகலின் அக்காலத்துத் தனது உள்ளச் சுழற்சியான் பெருகிய வேட்கை
மிகுதிக்கண்ணும் என்றவாறு.
 

பூவிடைப்படினும்   யாண்டு     கழிந்தன்ன      உணர்வினளாகலின் தனிமைப்படுங் காலம் சிறிதெனினும்   தலைவி   அதனை   மிக நெடிதாக
நினைவாள் என்பது தோன்றப் "புலம்பு பெரிதாகலின்" என்றார்.
 

எ - டு :

காமந் தாங்குமதி என்போர் தாம்அஃது

அறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்

யாம்எம் காதலர்க் காணே மாயின்

செறிதுளி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்

கல்பொரு சிறுநுரை போல

மெல்ல மெல்ல இல்லா குதுமே.

(குறு 290)
 

5) இன்பமும் இடும்பையும்   ஆகியவிடத்தும்   என்பது   = தலைவன்
உடனுறைதலைக்   கருதிய மகிழ்ச்சியும் பிரிதலைக் கருதிய துன்பமும் பற்றி
எண்ணுதலாகியவிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

வாரல் மென்தினை புலர்வுக்குரல் மாந்தி

சாரல் வரைய கிளையுடன் குழீஇ

வளிஎறி வயிரின் கிளிவிளி பயிற்றும்

நளிஇருஞ் சிலம்பின்நன் மலைநாடன்

புணரின், புணருமார் எழிலே, பிரியின்

மணிமிடை பொன்னின் மாமை சாயஎன்

அணிநலம் சிதைக்குமார் பசலை-அதனால்

அசுணம் கொல்பவர் கைபோல் நன்றும்

இன்பமும் துன்பமும் உடைத்தே

தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே

(நற் 304)
 

எனவரும்.
 

6. கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி  நயந்த  கிழவனை   நெஞ்சு
புண்ணுறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும்  என்பது =  யானைக்கன்று
போலும் மகன்    பிறந்ததனான்   தலைவி   விருப்பமிக்க   நெய்யாடுதல்
விழாவினைக் காண நயந்து வந்த தலைவனை நெஞ்சு  நோவச் செய்து தன்
பால் செறிவுறுதலை விலக்கிய இளிவந்த நிலைமைக் கண்ணும் என்றவாறு.
 

நேயத்தொடு  வந்த  தலைவனது  கூட்டத்தைப் புலவியான் இழத்தலின்
இளிவருநிலையாயிற்று.
 

எ - டு :

கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல்

சுரும்புபசி களையும் பெரும்புன லூர

புதல்வனை ஈன்றஎம் மேனி

முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே

(ஐங்-65)
 

எனவரும்.
 

7) புகன்ற உள்ளமொடு புதுவோர்ச் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு
நனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்தருக்கி  எதிர்பெய்து  மறுத்த
ஈரத்து  மருங்கினும் என்பது = விழா அயர்தலை விரும்பிய  உள்ளத்தொடு
புதியராய்  வந்த பரத்தையரது நலத்தை நுகர்தலைக்கருதிப் பிரிந்தவனாகிய
தலைவனைத் தனது தனிமைத்  துன்பத்தினை  எடுத்துக்காட்டி  அவன்பாற்
செல்லுதற்கியன்ற   நெஞ்சினை   மீட்டு  அதன்  முனைப்பினைத்  தேயப்
பண்ணிப்     பரத்தையைத்      தான்     காணாளாயினும்    அவளை
உருவெளிப்பாடாகத் தன் எதிர் நிறுத்தி ஆற்றாமையான் வந்த தலைவனது
வாயிலை மறுத்துரைக்கும் நயப்புடைய பகுதிக்கண்ணும் என்றவாறு.
 

அருக்குதல்   = குறையச்     செய்தல்-மழுங்கச்செய்தல்   எனினுமாம்.
எதிர்பெய்தல்=தலைவன்   விரும்பினானாகத்   தான்கருதிய   பரத்தையை
மனக்கண்ணால்     உருவகித்து     நிறுத்துதல்.   புலத்தலும்   ஊடலும்
தோன்றுதற்குக் காரணம் தலைவியது  பேரன்பே என்பது  விளங்க ‘ஈரத்து
மருங்கினும்’ என்றார்.
 

எ - டு :

"கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பில்"


என்னும் அகப்பாட்டினுள்
 

"மனைநகு வயலை மரனிவர் கொழுங்கொடி

அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ

விழவாடு மகளிரொடு தழூஉ அணிப்பொலிந்து.

மலரேர் உண்கண் மாணிழை முன்கைக்

குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது

உடன்றனள் போலும் நின்காதலி எம்போல்

புல்லுளைக் குடுமி புதல்வர்ப் பயந்து

நெல்லுடை நெடுநகர் நின்இன் றுறைய

என்ன கடத்தளோ மற்றே தன்முகத்து

எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி

அடித்தென உருத்த தித்திப் பல்லூழ்

நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு

கூர்நுனை மழுங்கிய எயிற்றள்

ஊர்முழுது நுவலும்நிற் காணிய சென்மே

(அக-176)
 

என மறுத்தமை கண்டு கொள்க.
 

8) தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை  வணங்கி   எங்கையர்க்   குரைஎன
இரத்தற்கண்ணும் என்பது = புதுவோர்ச்   சாயற்கு   அகன்று  தங்கி வந்த
ஒழுக்கத்தினை யுடைய   தலைவனை   அவன்  தன்னை   இரந்து  குறை பொறுக்க எனப் பணிந்து நிற்குங்கால் அவனை வணங்கி  எள்ளல் தோன்ற
நீ என்   மாட்டுக்   கூறும் இப்   பணிமொழியினை  எம்   தங்கையர்க்கு
(பரத்தையர்க்கு) முன்   உரைப்பாயாக    எனப்   புலந்து   கூறுமிடத்தும்
என்றவாறு.
 

உள்ளத்தே   புலவி   நீங்காமையான்   வணங்கியுரைத்தல்   எள்ளல்
கருதியதாயிற்று.
 

எ - டு :

நோதக்காய் என நின்னை நொந்தீவார் இல்வழித்

தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன்

நெகிழ்தொடி இளையவர் இடைமுலைத் தாதுசேர்ந்து

இதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால்
 

(மருதக்கலி - 8) என்பன கூறி
 

மண்டுநீ ராரா மலிகடல் போலும்நின்

தண்டாப் பரத்தை தலைக்கொள் ளநாளும்

புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனின்

தோலாமோ நின்பொய் மருண்டு"
 

என எங்கையரைத் தேற்றெனக் கூறியவாறு கண்டுகொள்க.
 

9) செல்லாக் காலை செல்கென   விடுத்தலும்   என்பது =   தலைவன்
பின்னும் புறம் போகாமல் இரந்து நிற்குங்கால் இவ்விடம்  விட்டு   நீங்கிச்
செல்வாயாக எனக் கடிவாள்போலக் கூறுமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

‘புள்ளிமிழ் அகல்வயல்’ என்னும் மருதக்கலியுள் 

(79)

பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி

நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி

ஆங்கே அவர்வயின் சென்றீ, அணிசிதைப்பான்

ஈங்கெம் புதல்வனைத் தந்து.
 

எனக் கூறியவாறு காண்க.
 

10) காமக்கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட்டிறுதிக் கண்ணும்
என்பது = தலைவனுக்குரியவளாகிய காமக் கிழத்தி மனைப்புறத்தே
சிறுதேருருட்டி விளையாடா நின்ற தன்புதல்வனை எடுத்துப் புல்லி
இன்புற்று விளையாடும் விளையாட் டிறுதிக்கண்ணும் என்றவாறு.
 

காமக்கிழத்தியினது    பேரன்பினையும்      புதல்வன்   விளையாட்டு
மகிழ்ச்சியினையும் கருதி இடையீடு படுத்தாமல் இறுதிக்கண்  கூறுமென்பார்.
’ஏமுறு விளையாட்டிறுதிக்கண்" என்றார்.
 

எ - டு :

நாயுடை முதுநீர் கலித்த தாமரைத்

தாதின் அல்லி அவிர்இதழ் புரையும்

மாசில் அங்கை மணிமருள் அவ்வாய்

நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்

யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை

தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே
கூர்எயிற் றரிவை குறுகினள், யாவரும்.
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி
பொலங்கலஞ் சுமந்த பூண்தாங் கிளமுலை
வருக மாளஎன் உயிரெனப் பெரிதுவந்து
கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன்
மாசில் குறுமகள் எவன்பே துற்றனை
நீயும் தாயை இவற்கென யான்தற்
கரைய வந்து விரைவனென் கவைஇ
களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா
நாணி நின்றோள் நிலைகண்டு யானும்
பேணினென் அல்லனோ, மகிழ்ந, வானத்து
அணங்கருங் கடவுள் அன்னோள்நின்
மகன்தா யாதல் புரைவதாங் கெனவே
(அக-16)
 

எனவரும்.
 

11) சிறந்த செய்கை அவ்வழித்   தோன்றி   அறம்புரி    நெஞ்சமொடு
தன்வரவறியாமை புறஞ்செய்து பெயர்த்தல்   வேண்டிடத்தானும் என்பது =
புதல்வன் விளையாட்டாகிய   சிறப்புடைய   அச்செய்கை   தலைவியொடு
நிகழ்தற்கண் தலைவியின் மனையறச் சீர்த்தியை விரும்பிய   நெஞ்சத்தொடு
மனையகத்தே செல்வான் தன் வருகையை அவள்  அறியாவாறு   பின்னே
நின்று புதல்வன்  வாயிலாகத்   தலைவியது   துனியைப்   பெயர்த்தலைத்
தலைவன் விரும்பி ஒழுகுமிடத்தும் என்றவாறு. எ - டு : "மையற விளங்கிய மணிமருள் அவ்வாய்" என்னும் மருதக்கலியுள் (81)
  

"அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல் 

முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி 

உதிர்துகள் உக்கநின் ஆடை ஒலிப்ப 

எதிர்வளி நின்றாய் நீ செல்" என்று தலைவி கூற,

 

"இனி எல்லா யாம் 

தீதிலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி 

யாதொன்றும் எங்கண் மறுத்தரவு இல்லாயின் 

மேதக்க எந்தை பெயரனை யாம்கொள்வேம் 

தாவா விருப்பொடுகன்று யாத்துழிச் செல்லும் 

ஆபோல் படர்தக நாம்"
  

எனத் தலைவன் கூறியதும் காண்க.
 

12) தந்தையர்   ஒப்பர்   மக்கள்   என்றதனான் அந்தமில்  சிறப்பின்
மகப்பழித்து  நெருங்கலும்  என்பது = குணப்பாங்கினான் தந்தையர் ஒப்பர்
மக்கள்  என்னும்  உலகியல்  வழக்கானே   தலைவனது   ஒழுக்கத்தினை
நோக்கிக் கடைபோகாத சிறப்பினையுடைய தன்புதல்வனைப் பழிப்பாளாய்த்
தலைவனை இடித்துரைத்தற் கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

"மைபடு சென்னி மழகளிற்றோடை"

என்னும் மருதக்கலியுள் (86) "செம்மால்,

வனப்பெல்லாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை

நிலைப்பாலுள் ஒத்தகுறி என்வாய்க் கேட்டொத்தி

கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும்

வென்றி மாட்டொத்தி பெருமமற் றொவ்வாதி

ஒன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தைபோல்

மென்றோள் நெகிழ விடல்"
 

என்று பலவுங்கூறியவிடத்துத்  தலைவன்     பின்புறமாக வர   அம்மகவு
அவன்மேற் பாய்ந்து சென்றபொழுது
 

"தந்தை வியன்மார்பிற் பாய்ந்தான் அறன்இல்லா 

அன்பிலி பெற்ற மகன்"
 

என இடித்துரைத்தவாறும் காண்க.
 

13) கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது  நல்லிசை   நயந்தோர்
சொல்லொடு தொகைஇப்பகுதியின் நீங்கிய   தகுதிக்   கண்ணும் என்பது =
நெறி பிறழ்ந்தோரது   புறத்தொழுக்கம்    துன்புறுத்தும்   என   உள்ளம் முரிந்திடாமல்  உயர்ந்த    புகழை     விரும்பினோராய    சான்றோரது முதுமொழியொடு கருத்தொன்றித் தலைவனையும் தன்னையும்  வெவ்வேறாக
நினையும் பகுப் புணர்வினின்றும் நீங்கிய தகவுறுதற்கண்ணும் என்றவாறு.
 

இது    கற்பின்கண்    பொறுத்தருளும்   தலைவியது  பண்புச் சிறப்பு
உணர்த்தியது. பரத்தைமையின் இழிவு புலப்படக்   ‘கொடியோர்’   என்றும்
‘சுடும்’ என்றும் கூறினார்.
 

எ - டு :

‘நீரார் செருவில்’ என்னும் மருதக்கலியுள்

(75)

ஆங்க, விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூளஞ்சவும்

அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும்

ஆங்கவிந் தொழியும், என்புலவி தாங்காது

அவ்வவ் விடத்தான் அவையவை காணப்

பூங்கண் மகளிர் புனைநலம் சிதைக்கும்

மாய மகிழ்நன் பரத்தைமை
நோவேன் தோழி கடன்நமக் கெனவே"
 

எனத், தோழியிடத்துக் கூறியவாறு கண்டுகொள்க.
 

14) கொடுமை ஒழுக்கங் கோடல்வேண்டி  அடிமேல்  வீழ்ந்த கிழவனை
நெருங்கிக் காதல் எங்கையர் காணின் நன்றென மாதர்  சான்ற   உவகைக்
கண்ணும் என்பது = தலைவன் தன் புறத்தொழுக்கத்தினைப் பொறுத்தருள்க
எனத் தன் அடிமேல் வீழ்ந்தவனை இடித்துரைத்து நின்பாற் காதலையுடைய
எம் தங்கைமார் காணநேரின்   நன்றாம்   என   நகையாடிக்   காதலான்
நிறைந்தொழுகுமிடத்தும் என்றவாறு.
 

மாதர் சான்ற, என்றதனான்  காணின்   நன்று   என்றது   நகையாடிக்
கூறியதென்பது புலனாகும்.
 

உரியராகக் கொண்ட காமக் கிழத்தியரைப் பேணலும் தன் கடனாதலின்
அதனைப் பிழையெனக் கருதி முனியாமல்   குடி   மரபாகக்   கொள்ளல்
வேண்டுமென்பது தலைவன் கருத்தாகலின் ‘கொடுமை ஒழுக்கம் பொறுத்தல்
வேண்டி’ என்னாது ‘கோடல் வேண்டி’ எனப்பட்டது.   தலைவி   அதனை
உணர்ந்து ஒழுகுதல் முன்னர்ப் "பகுதியின் நீங்கிய  `  தகுதி"  என்பதனாற்
புலப்படுத்தப்பட்டது.
 

எ - டு :

நினைக்கே யன்றஃது எமக்குமா ரினிதே

நின்மார்பு நயந்த நன்னுத லரிவை

வேண்டிய குறிப்பினை யாகி

ஈண்டுநீ அருளாது ஆண்டுறை தல்லே

(ஐங்-46)
 

எனவரும்.
 

15. தாயர் கண்ணிய நல்லணிப்  புதல்வனை மாயப்   பரத்தை உள்ளிய
வழியும் என்பது  =   புதல்வன்தாய், வழி   முறைத்தாய்   என்னும் தாயர்
கருதியுணரும் பொருட்டு, மாயஞ் சான்ற பரத்தை, அவர் தம்  புதல்வனைத்
தன் குறிப்பினையுணர்த்தும் நல்லணிகளை அணிவிக்க எண்ணியவிடத்தும்
என்றவாறு.
 

தலைவனைத் தன் உடல்  நலத்தான்  மயக்குபவள்  என்பது   விளங்க
‘மாயப்பரத்தை’ என்றார். மாயப்பரத்தை என்பது   இனஞ்சுட்டாத  அடை.
அஃதாவது புதியளாய் வந்த பரத்தை தலைவன் தன்மாட்டுக்  கொண்டுள்ள
நேயத்தை மனைக்கிழத்தியர்  அறியும்   பொருட்டு   அக்குறிப்புணர்த்தும்
அணிகலன்களைப்  புதல்வனுக்கு   அணிவித்தலைக்   கருதிப்   புனைந்த
விடத்துத் தலைவிக்குக் கூற்று  நிகழும்  என்றவாறாம்.  கண்ணிய  என்பது
‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.   அஃது  உள்ளிய என்னும்
பெயரெச்ச வினையொடு முடிந்தது.
 

எ - டு :

‘உறுவளி தூக்கும்’ என்னும் மருதக் கலியுள் 

(84)

"சிறுபட்டி, ஏதிலார் கையெம்மை எள்ளுபு நீதொட்ட

மோதிரம் யாவோயாங் காண்கு"
 

எனக் கண்டவள்
 

"அவற்றுள் நறாஇதழ்க் கண்டன்ன செவ்விரற்கேற்பச்

சுறவே றெழுதிய மோதிரந் தொட்டாள்

குறியறிந்தேன் காமன் கொடிஎழுதி என்றும்

செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்

பொறியொற்றிக் கொண்டாள் வல் என்பது தன்னை

அறீஇய செய்த வினை"
 

எனப் பரத்தையினது குறிப்பாக  அதனை   உணர்ந்து   கூறியவாறு கண்டு
கொள்க.
 

16) தன்   வயிற்   சிறப்பினும்   என்பது  =   மேற்கூறிய  தாயர் தம் புதல்வனைப் பரத்தை யுள்ளி   அடைய   இயலாமல்  தம்பால்   தேக்கிக்
கொள்ளுமிடத்தும் என்றவாறு.
 

எ - டு : ‘ஞாலம் வறந்தீர’ என்னும் மருதக்கலியுள்   (82)   புத்தேளிர்
கோட்டத்து அழைத்துச் சென்ற தோழி  ஆங்குப்   பரத்தை  செய்துவிட்ட
கோலத்தைக் கூறக் கேட்ட தலைவி.
 

      

. . . . . . . அலைக்கு ஒரு

கோல்தா, நினக்கவள் யாராகும் - எல்லா

வருந்தியாம் நோய்கூர நுந்தையை என்றும்

பருந்தெறிந் தற்றாகக் கொள்ளும், கொண்டாங்கே

தொடியும் உகிரும் படையாக நுந்தை

கடியுடை மார்பின் சிறுகண்ணும் உட்காள்

வடுவும் குறித்தாங்கே செய்யும் விடுஇனி

அன்ன பிறவும் பெருமான் அவள்வயின்

துன்னுதல் ஓம்பித் திறவதில் முன்னிநீ

ஐயம் இலாதவர் இல்லொழிய எம்போலக்

கையா றுடையவர் இல்லல்லால் செல்லல்

அமைந்தது இனிநின் தொழில்"
 

எனச் சிறைப்படுப்பாளாய்க் கூறியமை கண்டுகொள்க.
 

பொதுப்படக் கூறியமையான் தலைவன்கண்  செல்ல ஒட்டாமல் தடுத்துக்
கொள்ளுமிடத்துக் கூறலும் கொள்க.
 

17) அவன்வயிற் பிரிப்பினும் என்பது =   தலைவன்கண் கொண்ட துனி
காரணமாகப் புதல்வன்பால் தனக்குப்   பற்றுரிமை   இல்லாதாள்   போல
வேறுபடுத்துக் கூறுமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

‘மைபடுசென்னி’ என்னும் மருதக்கலியுள் 

(86)

கன்றி யதனைக் கடியவும் கைந்நீவிக்

குன்ற இறுவரை கோண்மா இவர்ந்தாங்குத்

தந்தை வியன்மார்பிற் பாய்ந்தான் அறனில்லா

அன்பிலி பெற்ற மகன்"
 

என்புழித் தலைவனுக்குரிமை கொடுத்து ‘அன்பிலி   பெற்ற   மகன்’  என
வேறுபடுத்திக் கூறியவாறு காண்க.
 

18)     இன்னாத்    தொல்சூள்   எடுத்தற்கண்ணும்      என்பது = மாயப்பரத்தையரைத்  தலைவன் யான்    அறியேன்   எனப்   பொய்த்து
இன்னாதாகிய சூளுரை கூறுதற்கண்ணும்   என்றவாறு.   அவன்   சூளுரை கூறுதலைக் களவின்கண் அறிந்தவளாதலின் "தொல் சூள்" என்றார்.
 

எ - டு ;

"ஒரூஉக் கொடியியல் நல்லார்"

என்னும் மருதக் கலியுள் 

(88)

தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார்

தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி

நீயுறும் பொய்ச்சூ ளணங்காகின் மற்றினி

யார்மேல் விளியுமோ கூறு, பொய்ச்சூளான்வரும்

கேடு எம்மேல் வருமென மறுத்துக் கூறியவாறு காண்க.

19) காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய தீமையின்  முடிக்கும்  பொருளின்
கண்ணும் என்பது = தலைவன் காமக்கிழத்தியரது நலத்தைப் பாராட்டிய தீய
ஒழுக்கங்காரணமாக முடித்துக் கூறலுறும் பொருளின் கண்ணும் என்றவாறு.
 

அஃதாவது   தலைவன்   காமக்கிழத்தியரொடு    விழாவயர்ந்தமையும்
புனலாடியமையும் தன்  பாங்கியரான்   அறிந்த   தலைவி   அவன் கூறிய
பணிமொழிகளையும் சூளுரையையும் மறுத்துக் கொடுமை  கூறி  ஊடுதலைச்
செய்யும் என்றவாறு. பொருள் என்றது கற்பொழுக்கத்திற்குரிய
ஊடலை.
 

எ - டு :

"ஒருஉக் கொடியியல் நல்லார்"

என்னும் மருதக் கலியுள்

(88)

"கடியர் தமக்குயார் சொல்லத்தக்கார் மாற்று"
 

என்ற  தலைவனை   நோக்கி,   வினைக்கெட்டு   வாயல்லா   வெண்மை
யுரையாதிகூறு   நின்   மாயமருள்வாரகத்து  எனத்  தலைவி  கூறியவழித்
தலைவன்,  "ஆயிழாய்   நின்கண்  பெறினல்லால்  இன்னுயிர்  வாழ்கல்லா
என்கண் எவனோதவறு" என்ற தலைவனிடம் தலைவி, இஃதொத்தன்
 

     

புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்போல் 

வள்ளுகிர் போழ்ந்தனவும் வாள்எயிறு உற்றனவும் 

ஒள்ளிதழ் சேர்ந்தநின் கண்ணியும் நல்லார் 

சிரறுபு சீறச் சிவந்தநின் மார்பும் 

தவறாதல் சாலாவோ கூறு"
 

என ஊடிக்கூறியவாறு கண்டுகொள்க.
 

20) கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்குரியவை வடுவறு  சிறப்பிற் கற்பின்
திரியாமைக் காய்தலும் உவத்தலும்   பிரித்தலும்   பெட்டலும்   ஆவயின்
வரூஉம்      பல்வேறு       நிலையினும்    என்பது   =   தலைவனது புறத்தொழுக்கத்தின்கண்    தோழியிடத்துக்      கூறுதற்குரியனவாகவரும்.
குற்றந்தவிர்ந்த சிறப்பினையுடைய   கற்பென்னும்   திண்மை   வழுவாமல்
தலைவனை வெகுளுதல்,   உவத்தல்,   பிரித்துரைத்தல்,   அவன்   குறை
புலப்படாமல் பேணியுரைத்தல் ஆகிய இடத்தும்  அவற்றின்   தொடர்பாக
நிகழும் பல்வேறு நிலைமையின் கண்ணும் என்றவாறு.
 

எனவே, மேற்கூறப்பெற்ற கிளவிகள் தலைவனிடத்தே கூறற்கு உரியவை
என்பது      பெறப்படும்.    ஒன்றித்தோன்றும்    தோழியே   எனினும்
கற்பிற்றிரியாமை கூறும் எனத் தலைவியது பண்புச்சிறப்பு உணர்த்தியவாறு.
 

எ - டு :

வாரார் ஆயினும் வரினும் அவர்நமக்கு

யாரா கியரோ தோழி நீர

நீலப் பைம்போது உளரிப் புதல

பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி

நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த

வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று

இன்னா தெறிதரும் வாடையொடு

என்ஆ யினள்கொல் என்னா தோரே

(குறு-110)
 

இது தோழியிடத்துத் தலைவனைக் காய்ந்து கூறியது.
 

கொடிப்பூ வேழம் தீண்டி அயல

வடிக்கொள் மாஅத்து வண்டளிர் நுடங்கும்

அணித்துறை ஊரன் மார்பே

பனித்துயில் செய்யும் இன்சா யற்றே

(ஐங்-14)
 

இது தோழியிடத்துத் தலைவனை உவந்து கூறியது.

அடும்பவிழ் அணிமலர் சிதைஇ மீனருந்தும்

தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த்

தண்ணந் துறைவற் றொடுத்த நம்நலம்

கொள்வாம் என்றி தோழி கொள்வாம்

இடுக்கண் அஞ்சி இறந்தோர் வேண்டிய

கொடுத்துஅவை தாஎனக் கூறலின்

இன்னா தோநம் இன்னுயி ரிழப்பே

(குறு-349)
 

இது தோழியிடத்துத் தலைவனைத் தலைவி பிரித்துக் கூறியது.
 

"நாமவர் திருந்தெயிறு உண்ணவும் அவர்நமது

ஏந்துமுலை யாகத்துச் சாந்துகண் படுப்பவும்

கண்டுசுடு பரத்தையின் வந்தோற்கண்டும்

ஊடுதல் பெருந்திரு உறுகெனப்

பீடுபெற லருமையின் முயங்கி யோனே"

(இளம்-மேற்)
 

இது தோழியிடத்துத் தலைவனைத் தலைவி பெட்புற்றுக் கூறியது.
 

இதுமற் றெவனோ தோழி துனியிடை

இன்ன ரென்னும் இன்னாக் கிளவி

இருமருப் பெருமை ஈன்றணிக் காரான்

உழவன் யாத்த குழவியின் அகலாது

பால்பெய் பைம்பயிர் ஆரும் ஊரன்

திருமனைப் பல்கூடம் பூண்ட

பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே

(குறு-181)
 

இது தலைவனைக் குறை கூறிய தோழியைக் காய்ந்து கூறியது.
 

         

அருளும் அன்பும் நீங்கித் துணைதுறந்து

பொருள்வயிற் பிரிவோர் உரவோ ராயின்

உரவோர் உரவோ ராக

மடவ மாக மடந்தை நாமே.

(குறு-20)
 

இது தலைவன் பிரியக் கருதிய வழி மெலிந்து கூறியது.
 

சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்

பைதற வெந்த பாலை வெங்காட்டு

அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்

சென்ற நெஞ்சம் மீட்டிய பொருளே

(ஐங்-317)
 

இது நெஞ்சினைத் தூது விடுவதாகக் கூறியது.

கொக்கினுக் கொழிந்த தீம்பழம் கொக்கின்

கூம்பு நிலையன்ன முகைய ஆம்பல்

தூங்குநீர்க் குட்டத்துத் துடும்என வீழும்

தண்டுறை யூரன் தண்டாப் பரத்தைமை

புலவாய் என்றி தோழி - புலவேன்

பழன யாமை பாசடைப் புறத்துக்

கழனி காவலர் சுரிநந்து உடைக்கும்

தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் அன்னஎன்

நல்மனை நனிவிருந் தயரும்

கைதூ வின்மையின் எய்தா மாறே

(நற்-280)
 

இது வாயிலாக வந்த தோழியை மறுத்துக் கூறியது.
 

பிறவும் ஊடலும்   கூடலுமாகிய   உணர்வுதோன்றத்   தோழியிடத்துக்
கூறுவனவெல்லாம் இதன்கண் அடக்கிக்கொள்க.
 

21) வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக்   கிழவோள்   செப்பல்
கிழவது என்பது = தோழியைத் தவிர்ந்த ஏனைப் பாணன், பாடினி முதலாய
வாயிலோர்  ஏதுவாகக் கூறும்   பகுதிகளொடு  கூடித்   தலைவி   கூற்று
நிகழ்த்தல் கற்பொழுக்கத்திற்கு உரியதெனக் கூறுவர்  நூலோர்  என்றவாறு.
வாயில்களாவார் இவர் என்பது 52 ஆம் சூத்திரத்துக் கூறுப.
 

எ - டு :

காண்மதி பாணநீ உரைத்தற் குரியை

துறைகெழு கொண்கன் பிரிந்தென

இறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே

(ஐங்-140)
 

இதுபாணனைத் தூது போகக் கூறியது.
 

நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு

மாசுபட் டன்றே கலிங்கமும் தோளும்

திதலை மென்முலை தீம்பால் பிலிற்ற

புதல்வற் புல்லி புனிறுநா றும்மே

வாலிழை மகளிர் சேரித் தோன்றும்

தேரோற்கு ஒத்தனெம் அல்லேம், அதனால்

பொன்புரை நரம்பின் இன்குரற் சீறியாழ்

எழாஅல் வல்லை யாயினும் தொழாஅல்

கொண்டுசெல் பாணநின் தண்டுறை யூரனைப்

பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப்

புரவியும் பூண்நிலை முனிகுவ

விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே

(நற்-380)
 

இது பாணற்கு வாயில்  மறுத்தது.   ஏனை   வாயிலாரொடு    நிகழ்த்தும்
கூற்றுக்களைச் சான்றோர் செய்யுட்கண் கண்டுகொள்க.
 

வகை என்றதனான் பிறவாறுவரும்தலைவி   கூற்றெல்லாம்   இதன்கண்
அடங்குமாறறிந்து அடக்கிக் கொள்க.