சூ. 176 :

அவன்சோர்வு காத்தல் கடனெனப் படுதலின்

மகன்தாய் உயர்பும் தன்உயர் பாகும்

செல்வன் பணிமொழி இயல்பாக லான

(33)
 

க - து :

கற்பொழுக்கத்திற்குரியதொரு சிறப்புக் கூறுகின்றது.
 

பொருள் : பரத்தைமை  காரணமாகத் தலைவன் இல்லற நெறியினின்று
நெகிழ்ந்தொழுகாமற்   காத்தல்   தலைவியின்   கடனென    நூலோரான்
கூறப்படுதலானும்  புலவியைத்   தணித்தல்  வேண்டித்   தலைவியிடத்தும்
பணிமொழி  கூறித்   தாழ்தல்  தலைவற்கு   இயல்பாகலானும்,  புதல்வன்
தாய்  தலைவனை  இடித்துரைத்து  அறிவு  மெய்ந்  நிறுத்தலான்  எய்தும்
உயர்ச்சியும் தலைவனது உயர்ச்சியேயாகும்.
 

என்றது : மனையறத்தின்கண் தலைவி உயர்வு தலைவற்கு இழுக்காகாது.
அவற்கும்  உயர்வேயாம் என்றவாறு. அஃதாவது  இல்லறக் கிழமை பூண்ட
மனைவி    தலைமைசெய்     தொழுகலும்     தலைவன்   தலைவியைப் பணிந்தொழுகலும்    வழுவாகா.  அவை   கற்பென்னும்    கைகோட்குச்
சிறப்பளிக்கும்  ஊடலும்  கூடலும்  பற்றி  நிகழ்வனவாதலின் இலக்கணமே
என்றவாறு. இஃது ஓராற்றான் கற்பிற்குரிய இலக்கணமாதலின் பொருளியலுள்
வையாது ஈண்டுவைக்கப்பட்டதென்க.